வாசிங்டன், மே 5 – அமெரிக்காவில் ‘கோச்சடையான்’ படம் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவில் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘கோச்சடையான்’ படம் மே 8ஆம் தேதி வியாழக்கிழமையே வெளியாகிறது.
இதன் மூலம் இப்படம் புதிய வரலாறு படைக்கிறது. அமெரிக்காவில் ‘கோச்சடையான்’ தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அட்மஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும், இந்தி பதிப்பை ஈராஸ் நிறுவனமும் வெளியிடுகின்றன.
தமிழ் மொழியில் மட்டும் கோச்சடையான் 100 திரையரங்குகளுக்கும் அதிகமாக அமெரிக்காவில் திரையிடப்படுகிறது. முன்னதாக எந்திரன் 85 அரங்குகளில் வெளியானது.
இதன் மூலம் சூப்பர் ஸ்டாரின் முந்தய சாதனையை அவரே முறியடிக்கிறார். 78 அரங்குகளில் வெளியான அஜீத்தின் ஆரம்பம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அட்மஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் வெளியிட்ட ஜில்லா மற்றும் வீரம் தலா 70 அரங்குகளில் வெளியானது. முன்னதாக, சூர்யாவின் சிங்கம் 2 படத்துக்கு 63 திரையரங்குகள் கிடைத்தன.
கோச்சடையான் தமிழில், 80 திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. வேறு எந்த இந்திய மொழிப்படங்களும் இத்தனை 3D அரங்குகளில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 3D யில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமும் கோச்சடையான்தான்.
அட்மஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிர்வாக இயக்குனர் ராம் முத்து இதுகுறித்துக் கூறுகையில், “அமெரிக்காவில் இந்திய படங்களுக்கான வர்த்தக வாய்ப்பை வெளிப்படுத்திய சூப்பர் ஸ்டாரின் படையப்பா, 32 ஆயிரம் டாலர்கள் முதலீட்டில் 2 லட்சம் டாலர்கள் வசூல் செய்தது.
2007-ல் வெளியான சிவாஜி படத்தின் வசூல் இன்னும் பல மடங்குஅதிகரித்தது. கமல்ஹாசனின் தசாவதாரமும் சிவாஜிக்கு அடுத்த அதிக வசூலைக் கொடுத்தது.
அமெரிக்க அரங்குகளில் எந்திரன் திரைப்படம் தமிழில் மட்டும் 1.6 மில்லியன் டாலர்களும், தெலுங்கு இந்தி உட்பட மூன்று மொழிகளிலும் சேர்த்து 2.6 மில்லியன் டாலர்கள் வசூல் செய்து புதிய வரலாறு படைத்தது.
தற்போது மூன்று மொழிகளிலும் சேர்த்து 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் கோச்சடையான் முந்தய சாதனைகளை முறியடிக்கும்” என நம்புவதாக தெரிவித்தார்.
மேலும் “அமெரிக்காவில் திரையிடப்படும் வெளிநாட்டு படங்களில், 200 அரங்குகளுக்கும் அதிகமாக வெளியாகும் முதல் படம் என்ற பெருமை ‘கோச்சடையான்’ படத்திற்கு கிடைத்துள்ளது,’ என்றும் ராம் முத்து தெரிவித்தார்
மோஷன் கேப்சரிங் டெக்னாலாஜி என்ற நடிப்புப் பதிவாக்க முறையிலான படம் என்றாலும், மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் ரஜினி படம் என்பதால் அமெரிக்க ரசிகர்களிடமும் கோச்சடையான் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கு பிடித்தமான அனிமேஷன் தொழில்நுட்பம் என்பதால் பெருமளவில் குடும்பத்தினர் திரையரங்குகளுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.