கொழும்பு, மே 6 – விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டும் என்று இலங்கை அரசு விடுத்த கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றுவதற்காக வெளிநாடுகளிலிருந்த அனுப்பப்படும் நிதி உதவி தொடர்பான விவரங்கள், தடை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தெரியும் என்றும், அதனால் அவர்களைப் பிடித்துத் தரக்கோரி சர்வதேச உதவியை இலங்கை அரசு நாடியுள்ளது. அதன் முயற்சியாக அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ள தடை பட்டியலை இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பியது.
இதைத்தொடர்ந்து, இந்தியா இலங்கைக்கு ஆதரவாக, தடைப் பட்டியலை தங்கள் நாட்டில் செயல்படுத்தியதாக இலங்கை அரசு கூறியுள்ளது. அதே சமயத்தில், அமெரிக்க அரசு, இலங்கையின் தடைப் பட்டியலை ஏற்க மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் தடையுத்தரவு கனடாவில் செல்லுபடியாகாது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பெய்ர்டு மற்றும் துணை அமைச்சர் லீய்ன் யெலிச்சும் பகிரங்கமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.