வாஷிங்டன், மே 8 – அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 2 மகள்களை காரில் பின் தொடர்ந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக வெள்ளை மாளிகையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 2 மகள்களான மாலியா மற்றும் ஷாஷா ஆகியோர் பள்ளியில் இருந்து நேற்று மதியம் வீட்டுக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர். அவர்களின் பின்னால் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பு வீரர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒபாமா மகள்களின் காரை மற்றொரு கார் பின்தொடர்ந்து வந்தது.
ஒபாமா குடியிருக்கும் வெள்ளை மாளிகை வரை அந்த கார் பின்தொடர்ந்து வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த காரை தடுத்து நிறுத்தினர்.
அந்த காரை 55 வயதான நபர் ஒருவர் ஓட்டி வந்தார். விசாரணையில் முன்னுக்கு பின் பதில் அளித்தார். இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெள்ளை மாளிகை சிறிது நேரத்துக்கு மூடப்பட்டது என்று அமெரிக்க ரகசிய புலனாய்வு பிரிவின் செய்தி தொடர்பாளர் எட்வின் டோனோவன் கூறினார்.
நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினால் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள 223 பள்ளி மாணவிகளை மீட்கும் பணிகளில் அமெரிக்கா ஒத்துழைப்பு அளிக்கும் என்று ஒபாமா அறிவித்தார்.
அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவரது மகள்களின் காரை பின்தொடர்ந்து கடத்த முயற்சி நடைபெற்றதா என்பது குறித்து கார் ஓட்டுநரிடம் அமெரிக்க உளவு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.