டெல்லி, மே 9 – தேர்தல் ஆணையம் எந்த அரசியல் கட்சிக்கோ அல்லது எந்த தனி நபருக்கோ பயந்து கடமையில் இருந்து தவறாது என்று பாஜகவுக்கும், மோடிக்கும் மறைமுகமாக பதிலடி தந்துள்ளார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்.
வாரணாசியில் மோடியின் பேரணிக்கு அனுமதியளிக்கவில்லை என்று புகார் தெரிவித்து பாஜக பெரும் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “சரியான அறிவுரைகளின் அடிப்படையில்தான் மோடியின் வாரணாசி ஊர்வலத்துக்கு தடை விதித்து தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.
இதை திசை திருப்ப முயலக்கூடாது. தங்களது ஊர்வலங்களுக்கு அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்தை கட்சிகள் அணுகும்போது, அதற்கு போதிய கால அவகாசம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதை அனைத்து அரசியல் கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தை முடக்குவதாக நினைத்துவிட வேண்டாம். இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுக்கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது.
ஆனால் தேர்தல் ஆணையம் சில கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. தேர்தல் ஆணையம் தனது கடமையை சரியாக, பாரபட்சம் பார்க்காமல் செய்து வருகிறது என்பதை நான் மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன்.
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, தேர்தல் நடத்தை விதிமீறல்களை கட்டுப்படுத்துவது என தேர்தல் ஆணையத்தின் பணிகள் மிகவும் சவாலானவை. எந்த ஒரு கட்சியை பார்த்தும் பயப்பட்டு தனது கடமையில் இருந்து தேர்தல் ஆணையம் தவறிவிடாது.
வாரணாசியில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தேர்தல் ஆணையத்தை குறை கூற முடியாது. உரிய நடைமுறைப்படி பேரணிக்கு அனுமதி கேட்கப்படவில்லை. எனவே அத்தொகுதியின் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்யும்போது அரசியல் தலைவர்கள் தங்களது முதிர்ச்சியை காட்ட வேண்டும். அமேதி தொகுதியில் ராகுல்காந்தி வாக்குச்சாவடிகளுக்குள் பார்வையிட சென்றதாக வந்துள்ள புகார் பற்றி தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளேன்” என்றார் சம்பத்.