மே 9 – மனித உடல் ஆரோக்கியத்துக்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றைச் செய்திருக்கிறார்கள்.
அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு தினசரி அரை கிலோ காய், கனிகளை உண்பது அவசியம் என்கிறார்கள். சுமார் 65 ஆயிரம் பேரிடம் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுநாள்வரை, 25 வயதுள்ள ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவாவது காய்கறி மற்றும் பழங்களை உண்ண வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரை செய்து வந்தார்கள்.
ஆனால் தற்போது, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 560 கிராம், அதாவது அரை கிலோவுக்கும் அதிகமாக காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுவதுதான் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் சிபாரிசு செய்கின்றனர்.
இதன்மூலம் மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பதுடன், உடலின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான சத்துக்களையும் காய்கறிகளும், பழங்களும் கொடுக்கும் என்பது இந்த ஆய்வாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது.
இதில் ஒரே வகையான காய்கறி, உதாரணமாக அரை கிலோ கேரட்டை சாப்பிட்டால் போதுமா, அல்லது ஒரே வகையான பழம், உதாரணமாக இரண்டு வாழைப்பழங்களைச் சாப்பிட்டால் போதுமா என்று கேட்டால், அது சரியான அணுகுமுறையாக இருக்காது என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.
தினசரி சாப்பிடும் காய்கறி மற்றும் பழங்களில் பல் வேறு வகையான காய்கறிகளும், பழங்களும் இருப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றும், அதன்மூலமே மனித உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்கும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காய்கறிகள் என்பவை விலை உயர்ந்த காய்கறிகளாகவோ, பழவகைகள் என்றதும் விலை உயர்ந்த பழங்களாகவோதான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் விஞ்ஞானிகள், தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய், கத்தரி, வெண்டை, கோவைக்காய், பலவகையான கீரைகள், முள்ளங்கி, வாழைத்தண்டு போன்ற காய்கறிகளும் கூட நல்ல பலனைத்தரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பழங்களிலும் கூட வாழைப்பழம், நாவல்பழம், பலாப்பழம், இலந்தை, மாம்பழம் போன்ற சாதாரணமாகக் கிடைக்கும் பழங்களிலும் நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரை கிலோ காய், கனிகளை அன்றாடம் சாப்பிடுவது அவசியம் என்கிறது இந்த ஆய்வறிக்கை.
பொதுவாக அசைவ உணவுகளைவிட, சைவம் என்ற பிரிவில் வரும் காய்கறிகளும், கனிகளும் அதிகம் நன்மை பயக்கின்றன, உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்பதே இதுநாள் வரை ஆய்வு முடிவுகள் வெளியிடும் தகவல்களாக இருக்கின்றன.
இந்நிலையில், தற்போது ஒவ்வொருவரும் தினமும் எவ்வளவு காய்கறிகள், கனிகளைச் சாப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். இதை அப்படியே கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், கூடுமானவரை அதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம்.
முடிந்தவரை எவ்வளவு மரக்கறி உணவுகளைச் சாப்பிட முடியுமோ, அவ்வளவு சாப்பிடலாம். காய்கறி, பழங்களிலும், அவை இயற்கை முறையில் விளைந்தவையாக இருந்தால் இன்னும் நல்லது என்பது விஞ்ஞானிகள் கருத்து. இனி நம்முடைய தினசரி உணவில் காய்கறிகள், கனிகளின் பங்கு கணிசமாக இருக்கட்டும்.