கோலதிரெங்கானு, மே 13 – அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள திரெங்கானு மாநில அரசு எந்நேரத்திலும் கவிழலாம் என அம்மாநில முன்னாள் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அகமட் சைட் கூறியுள்ளார்.
யாரும் எதிர்பாராத வண்ணம் ஓர் அரசியல் அதிரடியை நிகழ்த்தி அம்னோவை ஆட்டங்காணச் செய்துள்ளார் திரெங்கானுவின் முன்னாள் மந்திரி பெசார் அகமட் சைட்.
தன்னை மந்திரி பெசாராக தொடர்ந்து நியமிக்காத காரணத்தால், பழிவாங்கல் நடவடிக்கையாக அம்னோவிலிருந்தும் தனது சகாக்களோடு விலகியுள்ளார் அவர்.
இன்னும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அம்னோவிலிருந்து வெளியேறினால் தேசிய முன்னணி (தேமு) தனது பெரும்பான்மையை இந்த மாநிலத்தில் இழக்கும் என்று அவர் சொன்னார். ஆனால் இப்போதுள்ள நிலைமையில் தனது பெரும்பான்மையை தேசிய முன்னணி இழந்து விட்டது தெளிவாகி விட்டது.
கடந்த திங்களன்று மந்திரி புசார் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ அகமட் சைட் விலகினார். அவரின் இடத்தை டத்தோ அகமட் ரசிஃப் அப்துல் ரஹ்மான் நிரப்பினார்.
அதற்கு அடுத்த 4 மணி நேரத்தில் அம்னோவிலிருந்து டத்தோஸ்ரீ அகமட் சைட் விலகினார். தன்னை கிஜால் சட்டமன்றத்தின் சுயேச்சை வேட்பாளராக பிரகடனப்படுத்திக் கொண்டார்.
இவரைத் தொடர்ந்து, புக்கிட் பீசி சட்டமன்ற உறுப்பினர் ரொஸ்லி டவுட் நேற்று காலையில் அம்னோவிலிருந்து வெளியேறினார்.
இவருக்கு முன்னதாக அஜில் சட்டமன்ற உறுப்பினர் கஸாலி தாயிப்பும் அம்னோவிலிருந்து வெளியேறினார்.
இந்த மூவரைத் தொடர்ந்து மேலும் சிலர் அம்னோவிலிருந்து விலகுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் தேசிய முன்னணி திரெங்கானு சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டது உறுதியாகி விட்டது.