நாடே கடந்த சில மாதங்களாக பிரச்சார மழையில் மூழ்கியிருந்தாலும், எந்தவித சலசலப்பும் இன்றி, எங்கே இருக்கின்றார் என்பது கூட தெரியாமல் – எந்தவித அறிவிப்பும் செய்யாமல் மௌனம் காத்து சாதனை புரிந்திருக்கின்றார் மன்மோகன் சிங்.
பத்தாண்டுகள் பிரதமராக இருந்தவர், கடந்த ஆண்டுகளில் தான் தலைமை வகித்த காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு என்ன செய்தது என்பதைச் சொல்லக் கூட முன்வரவில்லை.
எல்லாம் – பிஜேபி குற்றம் சாட்டியபடியே, தாய்-மகன் ஆட்சியின் கீழ்தான் நடந்தது எனக் கூறாமல் கூறுவது போல் – தனக்கும் நடந்த ஆட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதுபோல் ஒதுங்கிக் கொண்டு விடைபெற்றுச் செல்கின்றார் அவர்.
நேரடியாக எந்தவித ஊழல்களிலும் சிக்காதவர் என்ற நற்பெயரை அவர் எடுத்திருந்தாலும், தனது பார்வையின் கீழ் பல்வேறு விதமான விஸ்வரூப ஊழல்கள் நடப்பதற்கு காரணமாக இருந்தார் – தடுத்து நிறுத்தாமல் பிரதமர் நாற்காலியில் பொம்மையாக அமர்ந்திருந்தார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் அவர் மீது எதிர்வரும் காலங்களில் தொடரும்.
மே 16ஆம் தேதியோடு அவரது பதவிக் காலம் முடிவடையும். அதன் பின்னர் புதிய பிரதமர் பதவியேற்க, தனது பதவியிலிருந்து விலகிச் செல்வார் மன்மோகன் சிங்.
இன்று பிரியாவிடை
அப்போது அவருக்கு அதிகாரிகள் எழுந்து நின்று உருக்கமான வரவேற்பு அளித்தனர்.
தனது கடைசி அலுவல் நாளான இன்று பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகத்திற்கு சென்றார்.
அப்போது அவருக்கு துறை அதிகாரிகள் எழுந்து நின்று வரவேற்பும் உணர்வுபூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
அப்போது அவர்களிடம் மன்மோகன் சிங், “நாட்டு நலனுக்காக நீங்கள் சிறந்த முறையில் சேவை செய்ய வேண்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்” என்றார்.
இறுதி அலுவல் நாளான இன்று, மருந்துகள் தயாரிப்பு துறையில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு மன்மோகன் சிங் ஒப்புதல் வழங்குவார் என்று தெரிகிறது.
மேலும்,பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையிலும், புதிய ராணுவ தளபதி தொடர்பாகவும் அவர் கையெழுத்திடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகளுக்கு சில நாட்களே இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி புதிய இராணுவத் தளபதியை நியமித்து, அதற்கான ஒப்புதலில் கையெழுத்திட மன்மோகன் சிங் பார்வைக்கு அனுப்பியிருக்கின்றது.
சோனியா காந்தி விருந்து
நாளை,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விருந்து அளிக்கிறார்.
இந்த விருந்திற்கு பிறகு காங்கிரஸ் செயற்குழு நிர்வாகிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கையெழுத்திட்ட நினைவுப்பரிசும் அவருக்கு வழங்கப்படுகிறது.
நாட்டு மக்களுக்கு உரை
தனது கடைசி அமைச்சரவைக் கூட்டத்திற்கு வரும் சனிக்கிழமை தலைமை தாங்கும் அவர், கூட்டம் முடிவடைந்த பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
பின்னர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் அவர் சந்திக்கிறார்.