சென்னை, மே 17 – “தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலிலே தூக்கிப் போட்டாலும், கட்டு மரமாகத் தான் நான் மிதப்பேன். அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம், கவிழ்ந்து விட மாட்டேன்” – இது ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின் போதும் கருணாநிதி மக்களைக் கவர முன் வைத்த வசனங்கள்.
தற்போது அந்த வசனம் நிதர்சனமாகி விட்டது. நடந்து முடிந்த 16-வது நாடாளுமன்றத் தேர்தலில், தமிழக மக்கள் கருணாநிதியை மட்டுமல்ல – ஒட்டுமொத்த திமு கழகத்தையும் மீள முடியாத் தோல்விக் கடலில் மூழ்கடித்து விட்டனர்.
ஜாதி, மதம் எனப் பிற்போக்கு சிந்தனையில் திளைத்திருந்த தமிழினத்தில், பெரியாருக்கு அடுத்ததாக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதுதிராவிட முன்னேற்றக் கழகம்.
பாமரத் தொண்டனின் ரத்ததாலும், வேர்வையாலும் தமிழகத்தில் ஆழமரமாய் வேரூன்றிய திமுக, இன்று அடியோடு சாய்ந்து போன வரலாறு, காலச் சுவடுகளில்அழியாவண்ணம் பொறிக்கப்பட்டுவிட்டது.
திமுக படுதோல்வி ஏன்?
திமுக வின் தோல்விக்கான விதை 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போதே விதைக்கப்பட்டு விட்டது.
திமுக வின் அரசியல் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது இரண்டு நிகழ்வுகள். ஒன்று, இந்தி எதிர்ப்பு போராட்டம் மற்றொன்று ஈழத் தமிழர் போராட்டம்.
மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்தும், ஈழத் தமிழர் விஷயத்தில் திமுக காட்டிய மெத்தனப் போக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், புதிய சட்டமன்றம் கட்டுவதில் ஊழல், அமைச்சர்களின் அதிகார துஷ்பிரயோகம் என அனைத்தும் திமுக வின் தோல்விக்கான காரணங்கள் என அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டது.
எனினும், கருணாநிதி தயக்கம் காட்டிய அனைத்து விவகாரங்களிலும் ஜெயலலிதா தீர்க்கமான முடிவுகள் எடுத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஸ்டாலினின் அரசியல் தந்திரம்
திமுக வில் அழகிரியின் நீக்கம், கூட்டணி பற்றிய முடிவுகள், வேட்பாளர்களின் தேர்வு மற்றும் பிரச்சார திட்டங்கள் என அனைத்தும் கருணாநிதியே முடிவு செய்வார் எனக் கூறப்பட்டாலும், திரைமறைவிலிருந்து வேலைசெய்தது, ஸ்டாலினின் பெரும் அரசியல் தந்திரம் என்பது அக்கட்சியிலுள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மை.
ஆனால் இது தமிழக வாக்காளர்களிடம் எடுபடவில்லை.
இனி திமுக.வின் நிலை?
திமுக வின் தோல்வியில் ஜெயலலிதாவை விட அதிக ஆர்வம் காட்டியவர் அழகிரி.
கட்சி உறுப்பினர்களுக்கிடையே ஏறுமுகத்தை மட்டுமே சந்தித்து வந்த ஸ்டாலினின் இந்த தோல்வியைக் காண சமயம் பார்த்து காத்திருந்த அழகிரி, தற்போது தனது ஆட்டத்தை ஆரம்பிப்பார் என்றே கூறப்படுகின்றது.
“திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு என்ன உரிமை உள்ளதோ, அதே உரிமை எனக்கும் உள்ளது” இதுசமீபத்தில் அழகிரி, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது கூறியது. தற்போது உள்ள நிலவரப்படி திமுக வின் பெரும் தோல்விக்கு, ஸ்டாலின் காரணம் காட்டப்படுவார் எனத் தெரிகின்றது.
இதனைப் பயன்படுத்தி கொண்டு அழகிரி தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் சென்று அறிவாலயத்தை முற்றுகையிடலாம் என்றும், அதனால் ஸ்டாலின்-அழகிரி இடையே நேரடியான மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அடுத்தமாதம், தனது 91-வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் கருணாநிதிக்கு, தமிழக மக்கள் அளித்த அதிர்ச்சி வைத்தியம், தனது நிலைப்பாடு குறித்து அவருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும்.
இலவசங்களையும், வார்த்தை ஜாலங்களையும் வைத்தே தமிழக வாக்காளர்களின் வயிற்றை நிரப்பி விடலாம் என, இனி எந்தவொரு அரசியல் கட்சியும் எண்ணி விட முடியாது என்பதற்கு, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பட்டவர்த்தனமான உதாரணம்.
-சென்னையிலிருந்து சுரேஷ் குமார்