கோலாலம்பூர், மே 22 – மாயமான மலேசிய விமானம் MH370 -வின் சரக்குப் (கார்கோ) பட்டியல் அழிக்கப்பட்டுவிட்டது அல்லது மறைக்கப்பட்டுவிட்டது என்று எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிம் சாட்டிய குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் சார்பாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 1 ஆம் தேதியே கார்கோ பட்டியல் வெளியிடப்பட்டு விட்டதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எதிர்கட்சித் தலைவர் தனது சொந்த நாட்டின் மீது அனைத்துலக ஊடகங்களின் வாயிலாக அவதூறு பரப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவரது சமீபத்திய அவதூறாக கார்கோ பட்டியல் மூடி மறைக்கப்பட்டது என MH370 விவகாரம் மூலம், தனது சுய லாபத்திற்காக மலேசியாவின் நன்மதிப்பை கெடுக்க நினைக்கிறார்” என்று அரசாங்கத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 19 ஆம் தேதி, ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில், MH370 கார்கோ பட்டியல் மூடி மறைக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டது என்று குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.