Home நாடு மலேசிய ஏர்போர்ட்ஸ் நிர்வாகம் மீது டோனி பெர்னான்டஸ் கடுமையாக சாடல்

மலேசிய ஏர்போர்ட்ஸ் நிர்வாகம் மீது டோனி பெர்னான்டஸ் கடுமையாக சாடல்

662
0
SHARE
Ad

tony-fernandes-airasiaகோலாலம்பூர், மே 22 – புதிதாக திறக்கப்பட்ட இரண்டாவது விமான நிலையத்தில் செயல்படத் தொடங்கிய இரண்டு வாரத்திற்குள் ஏர் ஆசியா மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் போக்கு குறித்து கடுமையாகச் சாடியுள்ளது.

விமான நிறுவனங்களுக்கு நெருக்குதல் அளிக்கும், மட்டம் தட்ட நினைக்கும் மலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் போக்கு குறித்து ஏர் ஆசியா குழும தலைமை செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னான்டஸ்  கடுமையாக சாடியுள்ளார்.

“மலேசிய ஏர்போர்ட்ஸ் நிறுவனம் ஒன்றை உணர வேண்டும். எங்களை போன்ற விமான நிறுவனங்கள் தான் அவர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் எங்களோடு ஒத்துழைக்க வேண்டும். மாறாக நெருக்குதல் அளிக்கவோ மட்டம் தட்டவோ கூடாது” என்று தமது டுவிட்டர் செய்தியில் டோனி பெர்னான்டஸ் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

டோனி பெர்னான்டசின் குறை கூறல்கள்

இப்போது ஏர்ஆசியா தங்களது சொந்த பயண முகப்பிட இயந்திரங்களை பயன்படுத்த முடியாது என்றும் எங்களின் வணிக முத்திரைகளை தாங்கிய சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை வைக்க முடியாது என்றும் மலேசிய ஏர்போர்ட்ஸ் எங்களுக்கு நெருக்குதல் அளித்து வருகிறார்கள். நீங்கள் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு துணை நின்ற விமான நிறுவனத்திற்கு நீங்கள் தருகின்ற ஒத்துழைப்பு இதுதானா?என்றும் டோனி பெர்னான்டஸ் தனது டுவிட்டர் செய்தியில் கடுமையாக குறைகூறியுள்ளார்.

ஏற்கெனவே 2ஆவது விமான நிலையத்திற்கு நாங்கள் செல்லமாட்டோம் என்று ஏர்ஆசியா கூறியிருந்தது. இருப்பினும் அனைத்துலக பொதுப் போக்குவரத்து அமைப்பு அந்த 2வது விமான நிலையத்தின் தரமும் பாதுகாப்பும் முறையாக இருக்கிறது என உறுதிப்படுத்திய பின்னர் ஏர் ஆசியா அந்த விமான நிலையத்தில் இயங்குவதற்கு ஒப்புக் கொண்டது.

“நாட்டின் தலைமைத்துவத்துடன் நெருக்கமான உறவுகளை பேணி வரும் மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் அவர்கள் தரப்பு கருத்துகளை மட்டுமே முன் வைக்கின்றார்கள். எங்கள் தரப்பு கருத்துகளை முன் வைப்பதில்லை. மாறாக எங்களை கெட்டவர்கள் போன்று சித்தரிக்கிறார்கள்” என்றும் பெர்னான்டஸ் குறை கூறினார்.

விமான ஓடு பாதையில் பள்ளங்கள் – இறக்கங்கள்

இதற்கிடையில் இரண்டாவது விமான நிலையத்தின் விமானம் நிறுத்தும் இடங்களிலும் விமானத்தின் ஓடுபாதைகளில் குழிகளும், பள்ளமான இறக்கங்களும் காணப்படுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தரப்பு கூறியதாக ஸ்டார் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விமான நிலையத்தின் தார் சாலைப் பகுதிகளில் விரிவான அளவில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் இதில் விமானத்தை செலுத்துவதற்கு கூடுதல் கவனத்தை விமானிகள் காட்டவேண்டியிருக்கிறது என்று அந்தப் பத்திரிகை செய்தி தெரிவித்திருக்கின்றது.

இருப்பினும்,  இதனால் பாதுகாப்பு அம்சங்களில் எந்த அபாயமும் இல்லை என மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.