கொழும்பு, மே 24 – இலங்கைக்கு எதிரான சர்வதேச நீதி விசாரணையை ஒரு போதும் ஏற்க முடியாது என ஐ.நா. செயலாளர் பான் கீ மூனிடம் இலங்கை அதிபர் ராஜபக்சே நேரடியாகத் தெரிவித்துள்ளார்.
சீனாவில் நடைபெறும் இரண்டு நாள் சர்வதேச மாநாட்டுக்காக சென்றுள்ள ராஜபக்சே, அந்த மாநாட்டிற்கு வந்திருந்த ஐ.நா. செயலாளர் பான் கீ மூனுடன் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். அந்தச் சந்திப்பின் போது ராஜபக்சே மேற்கூறிய கோரிக்கையை வைத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. மேலும் அவர், இலங்கைக்கு மீண்டும் வருமாறு, பான் கீ மூனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட சில நாட்களில், ஐ.நா. செயலாளர் பான்கீ மூன் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதற்குப் பின்னர் இப்போது அங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள மறு வாழ்வுப் நலப் பணிகளை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக பான் கீ மூனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்த சந்திப்பு நடைபெறுவதற்கு சீனா, இலங்கைக்கு பெரிதும் உதவியதாக, இலங்கை அதிபர் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆரம்பம் முதலே, இந்தியாவைக் கருத்தில் கொண்டு சீனா, இலங்கையை அரவணைத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.