சியோல், ஏப்ரல் 19 – கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற ஐநா பொதுச்செயலாளர் தேர்வில், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் பெரும் முயற்சியால் தான் பான் கீ மூன் வெற்றி பெற்றதாக பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரிய நாளிதழான ‘டாங் ய இல்போ’ (Dong-A Ilbo), சமீபத்தில் மறைந்த அந்நாட்டின் தொழில் அதிபரான சங் வொன்- ஜொங் என்பவரின் பேட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பேட்டியில் சங் வொன்- ஜொங், தான் ஐநா பொதுச்செயலாளர் தேர்வில் பான் கீ மூன் வெற்றி பெற பாடுபட்டதாகவும், எனது முயற்சிகளுக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே உதவியதாக இருந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த பேட்டியில் சங் வொன் இது தொடர்பாக கூறியுள்ளதாவது:-
“இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் எனக்கு நெருக்கமான நட்பு இருந்து வந்தது. அதனைப் பயன்படுத்தி, இலங்கை சார்பில் 2006-ம் ஆண்டு ஐநா பொதுச்செயலர் பதவிக்குப் போட்டியிட்ட ஜயந்த தனபாலவை போட்டியில் இருந்து விலக செய்து, தென் கொரியா சார்பில் போட்டியிட்ட பான் கீ மூனை ஆதரிக்கச் செய்தோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்
மேலும் அவர், “தேர்தலின் ஆரம்பக்கட்டத்தில், தாய்லாந்தின் பிரதிப் பிரதமர் சுராகியாட் சதிராதை மற்றும் ஐநா-வின் உதவிச்செயலராக இருந்த இந்தியாவின் சசி தரூர் ஆகிய இருவரில் ஒருவர் வெற்றி பெற வாய்ப்புள் அதிகம் இருந்தன. இந்நிலையில் தான், 2006-ம் ஆண்டு செப்டம்பரில் ஜயந்த தனபால போட்டியில் இருந்து விலகி, பான் கீ மூனுக்கு ஆதரவளித்தார்.”
“அதனைத் தொடர்ந்து, பான் கீ மூன் ஐநா பொதுச்செயலராக தேர்வானார். இந்த உதவிக்காக பான் கீ மூன் தொழிற்சங்கங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்” என்றும் அவர் கூறியுள்ளார்.
சங் வொன்னின் கியாங்னம் என்டர்பிரைசஸ் நிறுவனம், இலங்கையில் 1978-ம் ஆண்டு முதல் கட்டுமானத் துறையில் வர்த்தகம் செய்து வருகின்றது. சங் வொன் மீது, தென் கொரியாவில் பல மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவர் கடந்த 9-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.