சென்னை, ஜூன் 3 – முதல்வர் ஜெயலலிதா இன்று தனி விமானத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழகத்தில் செயல்படுத்த உள்ள மக்கள் நல திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்துகிறார்.
டெல்லியில் நடைபெறும் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பிரதமராக நரேந்திர மோடி கடந்த 26-ஆம் தேதி பதவியேற்றார்.
டெல்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதால் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவ்விழாவை புறக்கணித்தார்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா இன்று டெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இதற்காக இன்று காலை 9 மணிக்கு (மலேசிய நேரம் 11-30) சென்னை, மீனம்பாக்கத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
முதலில் டெல்லியில் உள்ள தமிழக இல்லம் செல்கிறார். அங்கு, ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து, பிற்பகல் 1.30 மணிக்கு பிரதமர் அலுவலகம் சென்று நரேந்திர மோடியை ஜெயலலிதா சந்திக்கிறார்.
மோடியை சந்தித்து பிரதமராக பதவியேற்றதற்கு வாழ்த்து சொல்லும் ஜெயலலிதா, தொடர்ந்து தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் புதிதாக அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்ற மனு ஒன்றையும் பிரதமரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளார்.
அந்த மனுவில், புதிய மின் திட்டங்கள், மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டங்கள், மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம், கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு கூடுதல் நிதி உள்ளிட்டவை அடங்கும்.
அதேநேரம், தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்யும் நடவடிக்கை, தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கவும் பிரதமர் மோடியிடம் ஜெயலலிதா வலியுறுத்துவார்.
இந்த சந்திப்புக்கு பிறகு நிதி அமைச்சர் அருண்ஜெட்லியையும் ஜெயலலிதா சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்வதையொட்டி, தமிழகத்தில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 10 மாநிலங்களவை உறுப்பினர்களும் நேற்றே விமானம் மூலம் டெல்லி சென்றனர்.
அதேபோன்று மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள், டெல்லி விமான நிலையம் மற்றும் தமிழக இல்லம் வரும் ஜெயலலிதாவுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
பிரதமர் மோடியை ஜெயலலிதா இன்று பிற்பகல் சந்தித்து விட்டு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, ஜெயலலிதா இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சந்தித்து பேசுவார் என தெரிகிறது. அதன் பின்னர், தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று ஓய்வெடுக்கிறார்.
இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்கு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தமிழ்நாடு இல்லத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீரென்று ஜனாதிபதியை சந்திக்க முடிவு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்பு தனி விமானம் மூலம் இன்று இரவு 8 மணிக்கு சென்னை திரும்புகிறார்.
ஜெயலலிதா டெல்லி செல்வதையொட்டி, தமிழக தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா, வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, முதல்வர் அலுவலக முதன்மை செயலாளர் ஷீலா பிரியா உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.