மெய்னே, ஜூன் 14 – அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ் தனது 90 வது பிறந்தநாளைக் கொண்டாட ஹெலிக்காப்டரில் இருந்து பாராசூட் மூலம் குதித்து சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.
சிறு வயது முதலே சாகசப் பிரியரான ஜார்ஜ் புஷ், கடந்த 1989 -ம் ஆண்டு முதல் 1993 -ம் ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தார்.
(பாராட்சூட் மூலம் குதிக்கும் ஜார்ஜ் புஷ்)
இவர் அமெரிக்காவின் 41-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது 90 வது பிறந்தநாளில் ஏதாவது சாகசம் செய்த கொண்டாட நினைத்த புஷ், மெய்னே என்ற இடத்தில் ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் மூலம் பறந்து தரை இறங்கி சாதனை படைத்தார். அவருடன் சில முன்னாள் ராணுவ வீரர்களும் இந்த சாகச முயற்சியில் ஈடுபட்டனர்.
இது பற்றி தனது டிவிட்டர் இணையப்பக்கத்தில் கூறிய ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ், இன்றைய நாள் எனக்கு மெய்னேயில் இனிய அனுபவமாக அமைந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 70 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்க கடற்படையில் தான் பணியாற்றிய சமயத்தில், பசிபிக் பெருங்கடலுக்கு மேலே விமான பயணத்தின் போது சுடப்பட்டதும், அப்போது தான் விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பியதும் நினைவு கூர்ந்தார்.
(90 வது வயதில் ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ்)
இவருக்குப் பிறகு இவரது மகனான ஜார்ஜ் டபிள்யூ புஷ், அமெரிக்காவின் 43 வது ஜனாதிபதியாக கடந்த 2001 -ம் ஆண்டு முதல் 2009 -ம் ஆண்டு வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள்: EPA