டெல்லி, ஜூன் 16 – டெல்லியில் மீண்டும் தேர்தல் நடத்தும் முடிவை விரைவில் மத்திய அரசும், ஆளுநரும் இணைந்து எடுப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தது.
மேலும், காங்கிரஸ் ஆதரவையும் பெற்றிருந்தது. ஆனால், லோக்பால் மசோதா பிரச்சனையால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 49 நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. இதனால் அங்கு பிப்ரவரி 17 முதல் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு நடந்து வருகின்றது.
சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் படுதோல்வி அடைந்தது. எனவே, யோசித்த அரவிந்த் மீண்டும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம் என முடிவு செய்தார். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத காங்கிரஸ், டெல்லி மக்களை கெஜ்ரிவால் ஏமாற்றியுள்ளார்.
அதனால் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்க இயலாது என்று கூறிவிட்டது.மேலும், மீண்டும் தேர்தல் நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இம்முடிவை சில அரசியல் கட்சி பிரமுகர்கள் விரும்பவில்லை என்றும் தெரிகின்றது. இந்தநிலையில் டெல்லி அரசியல் நிலவரம் குறித்து விரைவில் மத்திய அரசுக்கு துணைநிலை ஆளுநர் அறிக்கை சமர்ப்பிப்பார் என தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து முடிவுகளை மத்திய அமைச்சரவை எடுக்கும். டெல்லியில் புதிய தேர்தலை சந்திக்க காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் தயாராக உள்ள நிலையில் அங்கு விரைவில் தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு பரிந்துரை செய்யும் என கூறப்படுகிறது. அதன்படி 6 மாதங்களுக்குள் அங்கு தேர்தல் நடைபெற்று புதிய அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.