புதுடில்லி, ஜூலை 3 – 2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைவது தான், பாரதிய ஜனதா அரசின் முதல் லட்சியம் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
மாநில நகர்ப்புற செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் உடனான இரண்டு நாள் பொதுகூட்டம் புதுடில்லியில் நடக்கிறது. கூட்டத்தை தொடங்கிவைத்து அமைச்சர் வெங்கைய்யா நாயுடு பேசுகையில்,
“பல முக்கிய திட்டங்களை நிறைவேற்ற தேவையான நிதிநிலையை மேம்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. 2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை நினைவாக்க நரேந்திர மோடி தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, அரசு வருவாய் ஈட்டும் வகையிலான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருகிறது. சமீபத்தில் சென்னை, டில்லி, மும்பை ஆகிய இடங்களில் ஏற்பட்ட கட்டிட விபத்து கவனத்திற்குரியது. இது நகர திட்டமிடல் மற்றும் மேலாண்மையில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதை காட்டுகிறது.
புவியியல் தகவல் அமைப்பு ரீதியாலான வடிவமைப்புத் திட்டம் நகர்ப்புற வளர்ச்சியில் அவசியமானது. பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட நகர உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். குடிநீர் வசதி, திடக் கழிவு மேலாண்மை, சுகாதார வசதி என அனைத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இதற்காக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச நகர்புற அமைப்பு செயலாளர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டு விவாதிக்க வேண்டும். அப்போது தான் வளமான வளர்ச்சியை நாம் காண முடியும்” என்று வெங்கையா நாயுடு கூறினார்.