டெல்லி, ஆகஸ்ட் 7 – இந்தியாவில் விமான கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகைசெய்யும் புதிய மசோதா தயார்நிலையில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியாகியுள்ளது.
1982-ம் ஆண்டு இயற்றப்பட்ட விமான கடத்தல் தடுப்பு சட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் திருத்தங்கள் செய்யப்பட்டது. பின்னர், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதில் இருந்து மசோதா நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தற்போதைய மோடி அரசு, அந்த மசோதாவில் பல்வேறு முக்கிய அம்சங்களை சேர்த்து மசோதாவை வலிமையானதாக மாற்றியுள்ளது.
அந்த மசோதாவின்படி, உயிரிழப்பை ஏற்படுத்தும் விமான கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும், விமான கடத்தல் பற்றி புரளி சொல்கிறவர்களுக்கும் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்தவும், கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடத்தல் அபாயம் உள்ள விமானத்தை புறப்படாமல் நிறுத்திவைப்பதற்கும் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்பது போன்ற பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.