கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – சீனா அரசாங்கம் அரசு அலுவலகங்களுக்காக கொள்முதல் செய்யும் கணிப்பொறி, மடிக்கணி உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களில் ஆப்பிளின் தயாரிப்புகளான ‘ஐபேட்’ (iPad) மற்றும் ‘மேக்புக்’ (MacBook) மடிக்கணினிகள் போன்றவற்றை நிராகரித்துள்ளது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையில் கடந்த சில ஆண்டுகளாக நீர் பூத்த நெருப்பாய் இருந்து வரும் பனிப் போருக்கு முக்கிய காரணம், இரு நாடுகளும் ஒன்றை ஒன்று தொழில்நுட்ப ரீதியாக உளவு பார்த்தது ஆகும்.
சீனா அமெரிக்காவின் உளவு அமைப்பு அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் மூலம் தன்கள் நாட்டு இரகசியங்களை அமெரிக்கா உளவு பார்க்கிறது என குற்றம் சாட்டி வருகின்றது. அதன் காரணமாக அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், ஐபிஎம் மற்றும் ஆப்பிள் போன்றவற்றின் தயாரிப்புகளை தவிர்த்து வருகின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 8 இயங்குத்தளத்தை தடை செய்ய உள்நாட்டில் மறைமுக அறிவிப்பினை வெளியிட்டது. தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட், ஐபாட் மினி, மேக்புக் ஏர் உட்பட 10 தயாரிப்புகளை அரசின் அலுவலக பயன்பாட்டிற்கு கொள்முதல் செய்ய வேண்டாம் என மறைமுக ரீதியா அந்நாட்டின் நிதி மற்றும் வர்த்தக அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
சீனாவில் அந்நிய நிறுவனங்களின் வர்த்தக ஆதிக்கைத்தை அந்நாடு விரும்பவில்லை என்பதே, இவ்வாறான இடையூறுகளுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.
அமெரிக்கா தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆப்பிளின் வர்த்தக மதிப்பு சீனாவில் மிக அதிகம். கடந்த காலாண்டில் உலக அளவிலான ஆப்பிளின் வர்த்தகத்தில் சுமார் 37.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான வர்த்தகம் சீனாவில் நடந்துள்ளது.
சீனா அரசாங்கத்தால் அமெரிக்கா நிறுவனங்கள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவது, அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவும் சீனாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி தரும் விதமாக, ஜப்பான், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடன் சீனா கொண்டுள்ள எல்லைப் பிரச்சனைகளை உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றது.