பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 8 – கடந்த மே மாதம், ஜாசின் கேசாக் பாஜாக், தாமான் ரியாவில் அமைந்திருக்கும் ஸ்ரீ பிரத்தியாங்கார தேவி சக்தி பீடம் ஆலயத்தில் ஒரு ராஜ நாகத்தைக் கொண்டு சிறப்புப் பூஜை செய்யப்பட்டதற்கு மலேசிய இந்து சங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இது குறித்து மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன்ஷான் கூறுகையில், இந்து சமயத்தின் வேத சாஸ்திரத்தில் ஆலயத்தின் கருவறையில் பாம்பைக் கொண்டு பூஜை செய்து வழிபடும் முறையே இல்லை என்றும், ஆலயத்தின் கருவறையில் குருக்களைத் தவிர பக்தர்கள் நுழைய அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்து சமயத்தை அவமதிக்கும் படியான இது போன்ற செயல்களை செய்பவர்கள் மீதும், இந்துக்களிடம் தவறான வழிபாட்டு முறைகளை போதிக்கும் தரப்புகள் மீது இந்து சங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் மோகன் ஷான் குறிப்பிட்டார்.
அந்த ஆலயத்தின் இராஜ நாகத்தைக் கொண்டு சர்ப்ப பூஜை செய்வதை அவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மீண்டும் அது போன்ற வழிபாடுகள் நடந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோகன் ஷான் தெரிவித்தார்.