Home தொழில் நுட்பம் “அஞ்சான்” மூலம் தொழில் நுட்பத்தில் மேலும் முன்னேறும் தமிழ்ப் படவுலகம்!

“அஞ்சான்” மூலம் தொழில் நுட்பத்தில் மேலும் முன்னேறும் தமிழ்ப் படவுலகம்!

614
0
SHARE
Ad

Anjaan postersஆகஸ்ட் 13 – ஒரு காலத்தில் ஒரு படம் தமிழ் நாட்டின் திரையரங்குகளில் வெளியாகின்றது என்றால், அந்த திரைப்படத்தின் படச் சுருள், ஒரு தகரப் பெட்டியில் வைக்கப்பட்டு அந்த திரையரங்குக்கு கொண்டுவரப்படுவதே கொண்டாட்டமாக இருக்கும்.

படத்தின் நீளத்தைப் பொறுத்து நான்கைந்து தட்டையான தகரப் பெட்டிகளில் படத்தின் படச் சுருள்கள் வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், மாறி வரும் தொழில் நுட்பம், தமிழ் சினிமாவையும் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

படத்தின் தயாரிப்புப் பணிகளில் தமிழ்ப் படங்களில் தொழில் நுட்பம் இந்திய அளவில் பேசப்படும் ஒன்றாகும்.

இந்தியப் படங்களில் தொழில் நுட்ப ரீதியாக தமிழ்ப்படங்கள் முன்னணியில் இருக்கின்றன என்பது அனைவரும் ஒப்புக் கொண்ட ஓர் அம்சமாகும்.

இந்நிலையில், ஆகஸ்ட் 15ஆம் நாள் வெளியாகும் சூர்யாவின் அஞ்சான் படம் திரையரங்கு வெளியீட்டிலும் தொழில் நுட்ப சாதனையில் நுழைகின்றது.

anjaan-2முழுக்க முழுக்க இலக்கவியல் வடிவில் ‘அஞ்சான்’

இதுவரை படச் சுருள் வடிவிலும், குறுந்தட்டு வடிவிலும் வெளியிடப்பட்டு வந்த தமிழ்ப்படங்களின் வரலாற்றில் முதல் முறையாக அஞ்சான் முழுக்க முழுக்க இலக்கவியல் (டிஜிட்டல்) அடிப்படையில் வெளியாகின்றது.

தமிழகத்தில் மட்டும் 450  திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. கேரளா, தெலுங்கு, பிற இந்திய மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என அனைத்து பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 1500 திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிடுகின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் அனைத்து திரையரங்குகளிலும் படத்தை இலக்கவியல் முறையில் வெளியிடுகின்றனர் என்பதுதான்.

படச் சுருள், தகர டப்பா போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் இனி இல்லை.

தமிழ்ப்படங்களில் அஞ்சான் போன்ற பெரிய அளவு படம் ஒன்று இவ்வளவு அதிக திரையரங்குகளில் அதுவும் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் வெளியாவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகின்றது.

anjaanஇலக்கவியல் முறை எப்படி செயல்படுத்தப்படுகின்றது?

இந்த முறையில், திரைப்படங்கள் வன்வட்டு வடிவில் (hard disk) திரையரங்குக்கு விநியோகிக்கப்படும்.

திரைப்படம் தாங்கிய இந்த வன்வட்டுகள் திரையரங்குகளுக்கு விநியோகிக்கப்பட்டாலும், அந்த படத்தை  திரையரங்குக்காரர்கள் உடனடியாகத் தங்கள் விருப்பத்திற்கு திரையில் திரையிட முடியாது.

படத்தை வெளியிடும் தயாரிப்பு நிறுவனம், படம் முதன் முதலாகத் திரையிடப்படுவதற்கு ஓரிரு மணி நேரத்திற்கு முன்னதாக அந்த குறிப்பிட்ட திரையரங்குக்கு  கடவுச் சொல் (Pass Word) ஒன்றை அனுப்பும். அந்த கடவுச் சொல்லை  இணைத்தால்தான் படம் திரையில் தெரியும்.

இந்த முறையினால், திரையரங்குகளில் கடவுச் சொல் கிடைக்கும் வரை திரைப்படத்திற்கான நுழைவுச் சீட்டுகள் விற்கப்படுவதில்லை. நுழைவுச் சீட்டுகள் விற்கப்பட்டு விட்டு, தப்பித் தவறி கடவுச் சொல் தரப்படவில்லையென்றால் என்ன ஆகும் என்பதை விளக்கிச் சொல்லவேண்டியதில்லை.

anjaan-4க்யூப் நிறுனத்தின் தொழில்நுட்பம்

தற்போது தமிழ் நாட்டில் தயாராகும் திரைப்படங்கள் பெரும்பாலும் கியூப் (QUBE) எனப்படும் நிறுவனத்தின் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படுகின்றன.

இந்த தொழில் நுட்பத்தின்படி ஒவ்வொரு திரையரங்கிலும் ஒரு கியூப் இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும். திரையரங்குக்கு அனுப்பப்படும் வன்வட்டை அதாவது ஹார்ட் டிஸ்க்கை – அந்த கியூப் இயந்திரத்தில் பொருத்தினால்தான் படத்தைத் திரையிட முடியும்.

அதுவும், ஒரு திரையரங்குக்கு அனுப்பப்பட்ட வன்வட்டை எடுத்துக் கொண்டு போய் இன்னொரு திரையரங்கில் உள்ள கியூப் இயந்திரத்தில் பொருத்தினால், படம் திரையில் தெரியாது. அந்த வன்வட்டு வேலை செய்யாது.

எந்த வன்வட்டு எந்த திரையரங்குக்கு அனுப்பப்படுகின்றது என்பது வரை கியூப் தொழில்நுட்பத்தின் வழி முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகின்றது.

கடவுச்சொல் இணைக்கப்பட்டவுடன் அதன் பின்னர் அந்தக் குறிப்பிட்ட திரையரங்கில் அந்தப் படம் தொடர்ந்து அதே கடவுச் சொல்லைப் பயன்படுத்தி திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும்.

வேறு ஊருக்கோ அல்லது வேறு ஒரு திரையரங்குக்கோ படம் மாற்றப்பட்டால், கடவுச் சொல்லையும் மாற்றி விட முடியும். இதனால் ஒரு திரையரங்கில் பயன்படுத்தப்படும் அதே கடவுச் சொல்லைக் கொண்டு இன்னொரு திரையரங்கில் படத்தைத் திரையிட முடியாது.

அதேவேளையில் எந்தெந்த நேரத்தில் ஒரு படம் திரையரங்கில் திரையிடப்பட்டது, ஒரு நாளைக்கு எத்தனை காட்சிகள் திரையிடப்பட்டது போன்ற விவரங்களையும் துல்லியமாக கியூப் இயந்திரங்கள் பதிவு செய்திருக்கும். இணையம் மூலமாக கியூப் தலைமை நிறுவனத்திற்கும் இந்த விவரங்கள் உடனடியாகத் தெரிந்து விடும்.

படச் சுருள் முறையில் வெளியிடப்படும் படங்கள் அதிக முறை திரையிடப்பட்டால் அந்த படச் சுருள்கள் தேய்ந்து படம் காலப்போக்கில் மங்கலாகி விடும். கீறல்கள், கோடுகள் விழுந்திருக்கும்.

ஆனால் இலக்கவியல் வடிவில் வன்வட்டு வடிவில் இருக்கும் திரைப்படங்களை எத்தனை ஆயிரம் முறை திரையிட்டாலும், அதன் தெளிவும், மினுமினுப்பும் எப்போதும் குறையாது.

இந்த முறையில் எல்லாத் திரையரங்குகளில் அஞ்சான் படம் வெளியிடப்படுவதால், இந்தப் படம் திருட்டு குறுந்தட்டு வடிவில் வெளியிடப்படும் பிரச்சனைகளும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

-இரா.முத்தரசன்