சிங்கப்பூர், ஆகஸ்ட் 18 – உலக அளவில் பெரும் வர்த்தக சந்தையாக திகழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வெளிநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு பெரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அண்டை நாடான சிங்கப்பூருடன் வர்த்தக உறவை மேம்படுத்த இந்தியா முயற்சிகள் எடுத்து வருகின்றது.
கடந்த 10 ஆண்டுகளில் சிங்கபூரின் இந்திய முதலீடு 4.2 பில்லியன் டாலர்களில் இருந்து 5.9 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் வெளிநாடுகளில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் தற்போதய இந்திய அரசின் கனவுத்திட்டமான ‘ஸ்மார்ட் சிட்டி‘ (Smart City) மூலம் இந்தியாவின் 100 நகரங்களை சுகாதாரம், கட்டிட அமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முதலீடுகள் தொடர்பாகவும், சிங்கப்பூரின் கட்டிட அமைப்புகளையும், வளர்ச்சிகளையும் இந்திய நகரங்களில் அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்தும் விவாதிக்க 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிங்கப்பூர் வந்தார்.
கடந்த சனிக்கிழமை, சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் கே.சண்முகத்தை, சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இந்தியா, சிங்கப்பூர் இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையே இந்திய சுதந்திர தின விழாவின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, தனக்கு வியப்பளிப்பதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.