கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – மூன்று மாதங்களுக்குப் பின்னர் நடத்தப்பட்ட மத்திய செயலவைக் கூட்டத்திலும் – கெடா, கூட்டரசுப் பிரதேசம், பினாங்கு என வரிசையாக மூன்று மாநிலப்பேராளர் மாநாடுகளிலும் – கலந்து கொள்ளாத – தேசியத் தலைவர் பழனிவேல்,
பதவியைத் துறந்து மற்றவர்களுக்கு வழி விடுவதுதான் சிறந்தது என மஇகாவில் பரவலாக அவருக்கு எதிராக கண்டனங்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்திற்கு அபாயச் சங்கு என்றும் –
அவரை எதிர்த்து நிற்க கட்சியின் தேசிய உதவித் தலைவர்கள் சோதிநாதனும் சரவணனும் தயாராகி வருகின்றார்கள் என்றும்-
அபாரமான கற்பனை கலந்து, நடைமுறையிலோ, மஇகா சட்டவிதிகளின்படியோ சாத்தியமில்லாத ஓர் ஆரூடம் இன்று வெளியிடப்பட்டு இருக்கின்றது.
ஏன் சாத்தியமில்லை?
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மஇகா கட்சித் தேர்தல்கள் எதிர்வரும் 2016இல்தான் நடைபெற முடியும். பழனிவேலுவின் சொந்த அறிவிப்புப்படி மார்ச் 2016க்குள் தேசியத் தலைவர் பதவியை விட்டு விலகி விடுவேன் என்று அவரே அறிவித்திருக்கின்றார்.
அப்படி ஓர் அறிவிப்பு விட்டுத்தான், கடந்த ஆண்டில் தேசியத் தலைவராகவும் ஏகமனதாகவும் தேர்வு பெற்றார் பழனிவேல்.
ஆனால், எல்லாவற்றிலும் தாமதம், எந்த முக்கிய கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு, சமுதாயப் பிரச்சனைகள் எதனையும் கவனிக்காமல் அலட்சியம் என காலம் கடத்தி வரும் பழனிவேல், இப்போதே பதவி விலகிச் செல்ல வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல்கள் மஇகாவில் பகிரங்கமாகக் கேட்கத் தொடங்கி விட்டன.
ஆக, பழனிவேல் 2016 மார்ச் மாதம் வரை பதவியில் நீடிப்பது என்பதே இன்றைய எதிர்ப்பான சூழ்நிலையில் சாத்தியமில்லை.
அப்படியே அவர் 2016 மார்ச் மாதம் வரை பதவியில் நீடித்து அதன் பின்னர் பதவியை விட்டு விலகினால், அதன் பிறகு நடப்பு துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியமே இடைக்கால தேசியத் தலைவராகி விடுவார். கட்சி சட்டவிதியும் அதைத்தான் கூறுகின்றது.
சுப்ரா இடைக்காலத் தலைவராகி விட்டால், அதன் பின்னர் காலியாகப் போகும் துணைத் தலைவர் பதவிக்குத்தான் போட்டி நடைபெற முடியுமே, தவிர பழனிவேல் பதவி விலகுவதற்கு முன்பாக துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெற வாய்ப்பே இல்லை.
முதலில் தேசியத் தலைவர் தேர்தல் – பின்னர்தான் துணைத் தலைவர் தேர்தல்
இன்னொரு கோணத்தில் பார்த்தால், இடைக்காலத் தலைவராகப் போகும் சுப்ரா, முதலில் தேசியத் தலைவருக்கான தேர்தலை நடத்தி விட்டு, அதன்பின்னர்தான் தேசியப் பேரவையைக் கூட்டி தேசிய நிலையிலான தேர்தல்களை நடத்த முடியும்.
மஇகா சட்டவிதிகளும் இதற்குத்தான் வழிவகுக்கின்றன.
அந்த சமயத்தில் நடப்பு உதவித் தலைவர்களான, சோதிநாதனும், சரவணனும் அடுத்த தேசியத் துணைத் தலைவருக்கான போட்டியில் மோதுவதுதான் சாத்தியமே தவிர, அந்தப் போட்டியில் நிச்சயம் சுப்ரா இருக்கப் போவதில்லை.
சுப்ராவுக்கு ஆதரவு தரும் சரவணன்
இதற்கிடையில், மிகத் தெளிவான கோணத்தில் அரசியல் நடத்தி வரும் சரவணன் தேசியத் துணைத் தலைவர் சுப்ராவுடனும், அவரது ஆதரவாளர்களுடனும் நெருக்கத்தையும், நட்புறவையும் பாராட்டி வருகின்றார்.
கட்சித் தலைமைப் பொறுப்பை பழனிவேலுவுக்கு அடுத்து சுப்ரா ஏற்க வேண்டும் என்பதில் சரவணன் தெளிவான நோக்கையும் அதற்கேற்ற போக்கையும் கொண்டிருக்கின்றார் என்பது கட்சி வட்டாரங்களில் தெளிவாகத் தெரியும் சூழ்நிலையாகும்.
அடுத்த துணைத் தலைவராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட சுப்ராவும் அவரது ஆதரவாளர்களும் கண்டிப்பாக ஆதரவு வழங்குவார்கள் என்பதுதான் இன்றைய மஇகாவின் நிதர்சனம்.
எனவே, சுப்ராவை எதிர்த்து சரவணன் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்ற பேச்சுக்கே தற்போது இடமில்லை.
சோதிநாதனுக்கும் இதே நிலைமை
இறுதியாக, முதலாவது உதவித் தலைவரான சோதிநாதனும் அடுத்த துணைத் தலைவராக வர எண்ணம் கொண்டிருந்தாலும், தேசியத் தலைவர் தேர்தல்தான் முதலில் நடைபெறும் என்பதால் –
அந்தத் தேசியத் தலைவர் தேர்தல் முடிந்தவுடன் நடைபெறப்போகும் துணைத்தலைவர் தேர்தலில்தான் அவர் போட்டியிட முடியும்.
இன்றைய சூழ்நிலையில் கட்சியின் அனைத்து நிலைகளிலும் ஆதரவைப் பெற்று வரும் டாக்டர் சுப்ராதான், போட்டி நடந்தாலும் அடுத்த தேசியத் தலைவராக வென்று பொறுப்பேற்பார் என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.
எனவே, டாக்டர் சுப்ரா ஒன்று – பழனிவேலின் விலகலால் – இடைக்காலத் தேசியத் தலைவராவார்.
அல்லது, முதலில் தேசியத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு போட்டியிலோ, போட்டியில்லாமலோ அடுத்த தேசியத் தலைவராக அவர் பொறுப்பேற்பார்.
இன்றைய சூழ்நிலையில் சுப்ராவை எதிர்த்துப் போட்டியிட்டு வெல்ல இணையான தலைமைத்துவ ஆற்றல் கொண்டவர்கள் மஇகாவில் யாருமில்லை. பிரதமரின் தனிப்பட்ட ஆதரவும், தேசிய முன்னணியின் ஆதரவும் அவருக்கு இருக்கின்றது.
எனவே, தேசியத் தலைவர் தேர்தலுக்குப் பின்புதான் அடுத்த மஇகா துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்பதால் –
அடுத்த மஇகா துணைத் தலைவருக்கான போட்டியில் சுப்ராவை எதிர்த்து சோதிநாதனும், சரவணனும் ஒருசேர போட்டியிடுவார்கள் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத – கட்சி சட்டவிதிகளில் இடமில்லாத –
உச்சகட்ட கற்பனையில் உதித்த ஆரூடமாகும்.