கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – மலேசியாவின் 57வது சுதந்திர தினம் இன்று நாடெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இரண்டு விமானப் பேரிடர்களினால் ஏற்பட்ட இழப்புகளும், சோகங்களும் எல்லா மலேசியர்களின் மனங்களிலும் இழையோடிக் கொண்டிருந்தாலும் – அதனால், கொண்டாட்டங்களின் அளவு கணிசமாகக் குறைந்திருந்தாலும் – மக்களின் ஒற்றுமையையும், நாட்டின் வலிமையையும், எடுத்துக் காட்டும் வண்ணம் இராணுவப் படைகளின் அணிவகுப்புகளோடு இன்றைய கொண்டாட்டங்கள் நடந்தேறின.
இன்று காலை டத்தாரான் மெர்டேக்கா வளாகத்தில் மாமன்னர், பிரதமர்,அமைச்சரவை உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்த பேரணிகளை சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கண்டு களித்தனர்.
காலை 8 மணிக்கெல்லாம் மாமன்னர் தம்பதிகள் டத்தாரான் மெர்டேக்காவிற்கு வருகை தர, அவர்களை பிரதமரும் அவரது துணைவியாரும் வரவேற்றனர்.
பின்னர் தனக்கு வழங்கப்பட்ட, 14 குண்டுகள் முழக்கத்துடன் கூடிய மரியாதை அணிவகுப்பையும் மாமன்னர் ஏற்றுக் கொண்டார்.
நாட்டின் தேசிய கீதம் முழங்க, மலேசியக் கொடியேற்றும் வைபவமும் நடந்தேறியது.
துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசினும், அமைச்சரவை உறுப்பினர்களும் இன்று நடந்த பேரணி அணிவகுப்பில் கலந்த கொண்டனர்.
நேற்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் தேசிய தினத்தைக் குறிக்கும் வகையில் வாண வேடிக்கைகளும் நடத்தப்பட்டன.
இன்றைய தேசிய தின அணிவகுப்பின் காட்சிகள் சில:
பல இன ஆடை அணிகலன்களைப் பிரதிநிதிக்கும் நங்கையர்களின் அணிவகுப்பு
நாட்டின் இராணுவ வலிமையை எடுத்துக் காட்டும் பீரங்கி வண்டி….
படங்கள் : EPA