ஜோர்ஜ் டவுன், ஆகஸ்ட் 31 – பினாங்கு முதல்வரும் ஜனநாயக செயல்கட்சியின் தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் வீட்டின் மீது நேற்றிரவு ‘மொலட்டோவ் கொக்டெயில்’ (Molotov cocktail) எனப்படும் திரவ வெடிகுண்டு வீசப்பட்டது.
பினாங்கில் ஜாலான் பின்ஹோர்ன் சாலையிலுள்ள அவரது வீட்டில் நேற்றிரவு 11.48 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. யாரும் இந்த சம்பவத்தில் காயமடையவில்லை.
ஆனால், வீசப்பட்ட திரவ வெடிகுண்டு காரணமாக அவரது வீட்டின் தோட்டத்தில் சில பகுதிகள் எரிந்த நிலையில் காணப்பட்டன.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இந்த வெடிகுண்டை வீசியிருக்கக்கூடும் என காவல் துறையினர் கூறியுள்ள வேளையில், போத்தலில் இருந்த திரவம் மண்ணெண்ணெய் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
வீட்டைச் சுற்றியிருந்த படம் எடுக்கும் கருவிகள் மூலம் இந்த தாக்குதலை நிகழ்த்தியவர்களின் அடையாளங்களைக் காண தாங்கள் முயன்று வருவதாக காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
சம்பவத்தை நேரில் கண்டவர்கள் முன்வந்து காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர்.