புதுடெல்லி, ஆகஸ்ட் 31: மத்தியில் ஆட்சியை அமைத்தது முதல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நியமிக்கப்பட்ட பல மாநில ஆளுநர்களை (கவர்னர்) மத்திய அரசாங்கம் மாற்றி வருகின்றது.
இந்த வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் (படம்) கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்க உள்ளார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர்கள் நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி கேரள மாநில ஆளுநராக இருந்த ஷீலா தீட்சித் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, கேரள மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவி ஏற்க இருக்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 40வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.