Home கலை உலகம் கேரளாவின் விருதைத் திருப்பித் தருகிறார் வைரமுத்து

கேரளாவின் விருதைத் திருப்பித் தருகிறார் வைரமுத்து

778
0
SHARE
Ad

சென்னை : தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரும், குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கிப் படைப்பாளருமான வைரமுத்துவுக்கு அண்மையில் கேரளாவின் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது வழங்கப்பட்டது.

முதன்முறையாக கேரளாவை சேராத ஒருவரான கவிஞர் வைரமுத்துவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வைரமுத்து தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தன. கேரள நடிகை பார்வதி தனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்திருந்தார். ஏற்கனவே வைரமுத்து மீது பாலியல் புகார் எழுப்பியிருந்த பாடகி சின்மயியும் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் நேற்று வெள்ளிக்கிழமை (மே 28) அறிவித்தது.

இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து “ஓ.என்.வி விருதை திருப்பி அளித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்” என கவிஞர் வைரமுத்து அறிவித்தார்.

விருது கிடைத்ததும் கலைஞர் கருணாநிதியின் இல்லமான கோபாலபுரத்திற்கு மே 27- தேதி சென்ற வைரமுத்து அந்த விருதைக் கலைஞருக்கு காணிக்கை செய்தார். அப்போது அங்கு முதலமைச்சர் ஸ்டாலினும் தனது வாழ்த்துகளை வைரமுத்துவுக்கு தெரிவித்தார். “வைரமுத்துவின் மகுடத்தில் இன்னொரு வைரம்” என ஸ்டாலின் பாராட்டினார்.

அப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு வைரமுத்து பதிவிட்டார்:

கோபாலபுரத்தில்

ஓ.என்.வி இலக்கிய விருதினைக்

கலைஞருக்குக் காணிக்கை செய்தேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

என்னை வாழ்த்தி மகிழ்வித்தார்.

அவரது குரலும் அன்பும்

இன்னும் அந்த இல்லத்தில்

கலைஞர் வாழ்வதாகவே

பிரமையூட்டின.

தந்தைபோல்

தமிழ் மதிக்கும் தனயனுக்கு

நன்றி சொல்லி மகிழ்ந்தேன்.

சர்ச்சைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட விருதை திருப்பித் தருவதாகவும் காணொலி ஒன்றின் மூலம் வைரமுத்து பதிவிட்டார்.

மேலும், விருதுக்கான பரிசுத் தொகையான 3 இலட்சம் ரூபாயை கேரளாவின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிப்பதாகவும் வைரமுத்து அறிவித்தார்.

அத்துடன் தனது சொந்தப் பணத்திலிருந்து மேலும் 2 இலட்சம் ரூபாயை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிப்பதாகவும் வைரமுத்து தெரிவித்தார்.

அவர் ஓஎன்வி விருதைத் திருப்பித் தரும் அறிவிப்பைக் கொண்ட காணொலியை பின்வரும் யூடியூப் இணைப்பில் காணலாம்: