தோக்கியோ, செப்டம்பர் 1 – பிரதமராகப் பதவியேற்றவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் தந்து வருகை தந்திருக்கும் நாடுகளில் ஒன்று ஜப்பான். தற்போது ஜப்பானுக்கு அதிகாரத்துவ வருகை தந்திருக்கும் மோடி பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
ஜப்பானிலுள்ள ஒமோடெசன்கே என்ற இடத்தில் உள்ள ஜப்பானிய தேநீர் வைபவங்களுக்கான பயிற்சிப் பள்ளிக்கு இன்று வருகை தந்த நரேந்திர மோடி, ஜப்பானிய கலாச்சாரப்படி அமர்ந்து, குச்சிகளின் மூலம் உணவு உட்கொள்கின்றார். அருகில் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே.
ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே ரசிக்க, ஜப்பானிய பாரம்பரியப்படி பச்சைத் தேநீர் அருந்தி மகிழும் நரேந்திரமோடி.
ஜப்பானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஃபுமியோ கிஷிடாவை இன்று சந்தித்த நரேந்திர மோடி அவருடன் தீவிர பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார்.
ஆகஸ்ட் 30ஆம் தேதி ஜப்பான் வந்தடைந்த நரேந்திர மோடி, தனது ஐந்து நாள் வருகையின்போது, இந்த வட்டாரத்தில் பெருகி வரும் சீனாவின் ஆளுமையைக் குறைக்கும் வண்ணம், ஜப்பானுடன் அதிகம் நெருக்கம் பாராட்ட முற்பட்டுள்ளார் என வெளியுறவு ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜப்பானுடனான தற்காப்பு ஒத்துழைப்பு விவகாரங்களுக்கும் மோடி, தனது பேச்சு வார்த்தைகளின்போது முக்கியத்துவம் தருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
படங்கள் : EPA