Home நாடு பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ராயர் கைது

பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ராயர் கைது

804
0
SHARE
Ad

RSN Rayerஜோர்ஜ் டவுன், செப்டம்பர் 1 – பினாங்கு மாநிலத்தின் ஸ்ரீ டெலிமா சட்டமன்றத்தை பிரதிநிதிக்கும் ஜசெக உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் இன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நேற்று பிபிஎஸ் எனப்படும் பினாங்கு மாநிலத்தின் தன்னார்வ ரோந்து குழுவின் 156 உறுப்பினர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை விடுவிக்கப் போராடும் 20 பேர்கொண்ட வழக்கறிஞர் குழுவில் ராயரும் இடம் பெற்றிருந்தார்.

ஜோர்ஜ் டவுன் நகரின் வடகிழக்கு வட்டார காவல் துறை தலைமையகத்தில் இன்று மாலை 5.30 மணியளவில் தான் கைது செய்யப்பட்டதை ராயர் தகவல் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

பிபிஎஸ் எனப்படும் தன்னார்வ ரோந்து குழுவிற்கான ஸ்ரீ டெலிமா சட்டமன்றத் தொகுதியின் தலைவராகவும் ராயர் செயல்பட்டு வருகின்றார். 1966ஆம் ஆண்டின் சங்கங்களுக்கான சட்டத்தின் 41வது சட்டவிதியின்படி காவல் துறையின் விசாரணைக்கு உதவ ராயர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையின் சார்பில் அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர் விடுதலை

இதற்கிடையில் நேற்று தன்னார்வ ரோந்து குழுவினரோடு சேர்த்து கைது செய்யப்பட்ட பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், மாநில சமூகநலன் மற்றும் சுற்றுச் சூழல் பிரிவுக்கான குழுத் தலைவருமான பீ பூன் போ, இன்று காவல் துறையின் பிணையில் (police bail) விடுதலை செய்யப்பட்டார்.

பிபிஎஸ் இயக்கம் சங்கங்களின் பதிவகத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதால் அது சட்டவிரோதமானது என காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

கடந்த வாரம்தான், ராயர் மேலும் இரண்டு தனித் தனி தேச நிந்தனை மற்றும் குற்றவியல் பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

அந்தக் குற்றங்களை மறுத்து ராயர் விசாரணை கோரியுள்ளார்.

அவர் “அம்னோ செலாக்கா” என பினாங்கு மாநில சட்டமன்றத்தில் கடந்த மே 20ஆம் கூறினார் என்பதும் அதனால் அம்னோ உறுப்பினர்களின் உணர்வுகளை காயப்படுத்தினார் என்பதும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள இரண்டு வழக்குகளில் ஒன்றின் சாராம்சமாகும்.