Home நாடு தமிழ் வாழ்த்து விவகாரம் – கல்வி அமைச்சர்  பாட்லினா சிடேக் இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்டார்

தமிழ் வாழ்த்து விவகாரம் – கல்வி அமைச்சர்  பாட்லினா சிடேக் இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்டார்

400
0
SHARE
Ad
பாட்லினா சிடேக்

கோலாலம்பூர் : பினாங்கு மாநிலத்தில் கப்பளா பத்தாசில் நடைபெற்ற செந்தமிழ் விழா நிகழ்ச்சியில் தமிழ் வாழ்த்து பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் இந்திய சமூகத்திடம் இன்று மன்னிப்பு கேட்டார்.

தமிழ் வாழ்த்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கு காரணம் யார் என்பதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், பினாங்கு தமிழ்ப் பள்ளிகளுக்கான சிறப்புக் குழுவுக்கான தலைவருமான டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு, பாகான் டாலான் சட்டமன்று உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் ஆகியோரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

#TamilSchoolmychoice

தமிழ் வாழ்த்து தடை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறிய கல்வி அமைச்சர் இதற்கு தானே முழு பொறுப்பும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். இந்திய சமூகத்திடம் குறிப்பாக இது குறித்து அதிருப்தி கொண்டிருக்கும் இந்தியர்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் இது அந்த நிகழ்ச்சியின் போது தொழில்நுட்ப மற்றும் தொடர்பு பிரச்சனையால் நிகழ்ந்த தவறு என்றும் அவர் கூறினார்.

இது உண்மையிலேயே நடந்திருக்கக் கூடாது என நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 27) 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்த்தில் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதங்களை நாடாளுமன்றத்தில் தொகுத்து வழங்கிய போது தெரிவித்தார்.

கல்வி அமைச்சு மன்னிப்பு கேட்க வேண்டும் – பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கோரிக்கை

பிரபாகரன்

கல்வி அமைச்சரின் உரைக்கு முன்னதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் தமிழ் வாழ்த்து பாடப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு கல்வி அமைச்சு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த கல்வி அமைச்சர் எதிர்வரும் நவம்பர் 29-ஆம் தேதி பினாங்கு மாநில  அளவில் நடைபெறும் பிகேஆர் கட்சியின் தீபாவளி கொண்டாட்டத்தின் போது தமிழ் வாழ்த்து பாடப்படும் என்றும் அந்த தீபாவளி பொது உபசரிப்பில் கலந்து கொள்ளும் அனைத்து இனத்தவரும் தமிழ் வாழ்த்து குறித்து அறிந்து பெருமை கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது என கல்வி அமைச்சர் உறுதி மொழியும் வழங்கினார். இந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கான முழு பொறுப்பையும் தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் இதற்காக இனியும் யாரும் இதனை உணர்வு பூர்வமான பிரச்சினையாக்க வேண்டாம் என்றும் பாட்லினா கேட்டுக் கொண்டார்.

“நடந்தது ஒரு நோக்கத்தோடு நிகழ்த்தப்பட்டதல்ல. இதற்கு முன்னரும் இதுபோன்று நடந்ததில்லை. எனவே எந்த ஓர் இனத்தையும் புறக்கணிப்பதோ, ஒதுக்கி வைப்பதோ எங்களின் நோக்கம்  அல்ல” எனவும் பாட்லினா தனதுரையில் வலியுறுத்தினார்.

கல்வி அமைச்சரின் விளக்கத்தைத் தொடர்ந்து  பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் முழு விளக்கம் தந்ததற்காக அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

புதிய அரசியல் கட்சி வேண்டாம் – ராயர் வேண்டுகோள்

கல்வி அமைச்சரின் விளக்கத்தைத் தொடர்ந்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயரும் அனைத்து தரப்பினரும் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்திய சமூகத்தினருக்கு ஏற்கனவே நிறைய கட்சிகள் இருப்பதால் புதிய கட்சிகளை யாரும் தோற்றுவிக்க வேண்டாம் எனவும் ராயர் கூறினார்

இங்கிருக்கும்  ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும் நாங்களும் பிரதமர் அன்வார் இப்ராகிமும் அனைத்து இனங்களின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வோம் என்றும் ராயர் தெரிவித்தார்.