கப்பளா பத்தாஸ் (பினாங்கு) – இங்கு கடந்த வியாழக்கிழமை நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற்ற கல்வி அமைச்சின் செந்தமிழ் விழா நிகழ்ச்சியில் தமிழ் வாழ்த்து பாடுவதற்கு தடை செய்யப்பட்டதற்கும், அறிவிப்புப் பலகையில் திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டதற்கும் நாடு முழுமையிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதன் தொடர்பில் தன் கண்டனத்தைப் பதிவு செய்த சரவணன், தமிழ் வாழ்த்துக்குத் தடை விதித்தது யார் என்பதை விசாரிக்கும்படி கல்வியமைச்சர் பட்லினா சிடேக்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழ் வாழ்த்து என்பது உலகின் மூத்த மொழியான தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிகளில் முதலில் பாடப்படும் பாடலாகும். தாய்மொழியான தமிழின் பெருமையையும் பாரம்பரியத்தையும் தமிழ் வாழ்த்தின் மூலம் பாடுவது தமிழ் நிகழ்ச்சிகளில் வழக்கமாகும்.
எனவே, கல்வி அமைச்சு நடத்தும் எல்லா நிகழ்ச்சிகளிலும் தமிழ் வாழ்த்து பாடப்படுவது அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சரை சரவணன் கேட்டுக் கொண்டார். அதே வேளையில் பினாங்கு செந்தமிழ் விழாவில் தமிழ் வாழ்த்து பாடுவதற்கு தடை விதித்த அதிகாரியை கல்வி அமைச்சு விசாரிக்க வேண்டும் என்றும் மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தினார்.