Home நாடு தமிழ் வாழ்த்து – திருவள்ளுவர் விவகாரம் – பிரதமர், கல்வியமைச்சர் தலையிட வேண்டும் – சுந்தரராஜூ...

தமிழ் வாழ்த்து – திருவள்ளுவர் விவகாரம் – பிரதமர், கல்வியமைச்சர் தலையிட வேண்டும் – சுந்தரராஜூ வலியுறுத்து

339
0
SHARE
Ad
சுந்தரராஜூ சோமு – குமரன் கிருஷ்ணன் (நடுவில்)

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு கப்பளா பத்தாசில் நடைபெற்ற செந்தமிழ் விழாவில் தமிழ் வாழ்த்துக்குத் தடை விதிக்கப்பட்டது – திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டது –  விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும், கல்வி அமைச்சர் பட்லினா சிடேக்கும் தலையிட்டு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு வலியுறுத்தினார்.

பினாங்கு மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான சிறப்பு குழுவின் தலைவருமான சுந்தரராஜூ இதன் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்ததோடு, நடந்த சம்பவத்திற்கு தன் கண்டனத்தையும் பதிவு செய்தார்.

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணனும் அந்தக் கண்டன அறிக்கையை இணைந்து வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

“ஸ்ரீ மலேசியா கப்பளா பத்தாஸ் தங்கு விடுதியில் 23 நவம்பர் 2023-ஆம் நாள் நடைபெற்ற – மலேசியக் கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட – 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தமிழ் மொழித் திருவிழாவின் தொடக்க விழாவில் “கடவுள் வாழ்த்து” மற்றும் “தமிழ் வாழ்த்து” நிகழ்ச்சிகள் நடைபெறவிடாமல் தடுக்கப்பட்ட சம்பவம் குறித்து நாங்கள் அறிந்தோம். இந்திய சமூகத்தின், குறிப்பாக தமிழ் மொழி அல்லது கலாச்சாரம் சம்பந்தப்பட்ட எந்தவொரு நிகழ்விலும் “கடவுள் வாழ்த்து ” மற்றும் “தமிழ் வாழ்த்து” நிகழ்ச்சிகள் இடம் பெறுவது நமது பாரம்பரிய வழக்கம் என்பதால் பினாங்கு தமிழ்ப் பள்ளிகள் சிறப்புக் குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் என்ற முறையில், இந்த  சம்பவத்தால் வருத்தப்படுகிறோம்” என சுந்தரராஜூவும் குமரன் கிருஷ்ணனும் கூட்டாக அந்த அறிக்கையில் தெரிவித்தனர்.

பினாங்கு தமிழ்ப் பள்ளிகள் சிறப்புக் குழுவின் தலைவர் என்ற முறையில் பினாங்கு மாநிலக் கல்வித் துறையின் துணை இயக்குநர் ஹாஜி வான் சாஜிரியைத் தொடர்பு கொண்டதாகவும், இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை விரைவில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் சுந்தரராஜூ மேலும் தெரிவித்தார்.

“இந்த செந்தமிழ் விழா நிகழ்ச்சி முழுவதும் வேறு பல சிக்கல்கள் ஏற்பட்டன என்பதையும் நாங்கள் அறிகிறோம். தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் போற்றும் தமிழ் பெருமகன், திருக்குறள் படைத்த தமிழ் இலக்கியவாதி திருவள்ளுவர் உருவம் அடங்கிய பதாகைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  இந்தத் தடையின் பின்னணியில் உள்ள நியாயம் என்ன? தமிழ் மொழியைக் கொண்டாடும் வகையில் கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான ஒரு விழாவில் இது போன்ற பிரச்சனைகள் எப்படி நடக்கின்றன என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்?” என சுந்தரராஜூவும் குமரனும் தங்களின் அறிக்கையில் கேள்வி எழுப்பினர்.

“மலேசியா பல இன, மதங்கள் கொண்ட நாடு. ஒவ்வொரு இனமும் அந்தந்த மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளை அமைதியாகக்  கடைப்பிடிக்க கூட்டாட்சி அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கிறது. ஒருசில நபர்களின் இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் மக்களிடையே கருத்து வேறுபாடுகளையும், சச்சரவையும் ஏற்படுத்துகிறது. இதனால் இவ்விவகாரத்தில் மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் ஆகியோரின் தலையீட்டைக் கோருகிறோம். இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறோம்” எனவும் சுந்தரராஜூ- குமரன் தங்களின் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.