கோலாலம்பூர் : பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு தலைநகர், பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்திலுள்ள நுண்கலை ஆலயத்தின் (Temple of Fine Arts) கனகசபை மண்டபத்தில் “உரிமை” என்னும் பெயரிலான புதிய அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார்.
எனினும் இறுதி நேரத்தில் நுண்கலை ஆலயத்தின் நிர்வாகம் மண்டபத்துக்கான அனுமதியை ரத்து செய்திருப்பதாகவும், அதற்கு காவல் துறையின் கெடுபிடியையையும், நெருக்குதலையும் அவர்கள் காரணமாகச் சொல்வதாகவும் இராமசாமி தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மான்யங்களோடு செயல்படும் அமைப்பு நுண்கலை ஆலயம் என்பதால் இதுபோன்ற அரசு எதிர்ப்புக் கூட்டங்களுக்குத் தாங்கள் அனுமதி தரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்திருப்பதாக இராமசாமி இன்று சனிக்கிழமை காலையில் தன் முகநூல் பக்கத்தில் காணொலி வழி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தார்.
இதற்கிடையில் ஒரு மாற்று இடத்தைத் தேடியபோது ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அனுமதி தர முன்வந்ததால் நாளை ‘உரிமை’ கட்சியின் தொடக்கக் கூட்டம் கோலாலம்பூர் ஜாலான் ஹாங் கஸ்தூரியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறும் என்றும் இராமசாமி அறிவித்தார்.