*நாடாளுமன்றத்தில் திருக்குறள் ஒலிக்கும் நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தடையா?
*அதிகாரிகளின் அவமதிப்புக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்!
*எழுத்தாளர் சங்க மேனாள் தலைவர் இராஜேந்திரன் கோரிக்கை!
கோலாலம்பூர் : இந்திய சமுதாயம் வேறு எந்தவித முன்னேற்றகரமான சிந்தனைகளிலும் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் மொழி, பண்பாடு ஆகியவை தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்க அரசு அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுகின்றனரா என்கிற கேள்வி எழுகிறது என மலேசியத் தமிழ் அமைப்புகளின் பேரவை தலைவர் பெ.இராஜேந்திரன் கூறினார்.
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் திருக்குறளைச் சொல்லி உரையைத் தொடங்கும் நாடு இது. பிரதமரே திருக்குறளை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதும், தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியிலும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.
ஆனால், அரசாங்க அதிகாரிகள், தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தடை விதிக்கிறார்கள் என்றால் அவர்களின் நோக்கம் என்ன? தமிழனின் தலையை யார் வேண்டுமானாலும் பிடித்து ஆட்டலாம் என்கிற அலட்சியமா?
தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படுவது காலம் காலமாகத் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
மலேசியாவிற்கு எனத் தனியாக உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் அண்மைய காலமாக எல்லா மேடைகளிலும் ஒலிக்கின்றது.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தயாரித்தளித்த அந்தத் தமிழ்த்தாய் வாழ்த்தை, நம் நாட்டின் இறையருள் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதினார்.
அந்தப் பாடலைக் குறுந்தட்டு வழியாக தமிழ்ப்பள்ளிகளுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் விநியோகித்திருக்கின்றது என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மேனாள் தலைவருமான திரு.பெ.இராஜேந்திரன் குறிப்பிட்டார்.
இன்றைக்குச் சமூக அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் அரசியல் கட்சி மாநாடுகளிலும் பள்ளிகளிலும் அந்தத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகின்றது.
இலண்டன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினர் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் தமிழ்த்தாய் வாழ்த்தாகவும் அதனை ஏற்று பாடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பல கல்லூரிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும்கூட மலேசியர்கள் கலந்து கொள்ளும் பட்சத்தில் நம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்படுகின்றது.
குறிப்பாக, மலேசியாவில் தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப்பட்டு இருநூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழ்நாடு அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவிலும்கூட, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தயாரித்த தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்பட்டது. ஆனால், நம் நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தடை விதித்த அவலம் நேர்ந்துள்ளது.
இந்திய சமுதாயத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் என்கிற நம்பிக்கையில்தான் மாற்றங்களை நோக்கி சமுதாயம் அடி எடுத்து வைப்பதாக நம்பியது. ஆனால், அடிப்படை உரிமைகள்கூட பறிக்கப்படும் அவலம் தொடர்கின்றது. தமிழ் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்றால் இந்த அவமதிப்பை எப்படி எடுத்துக் கொள்வது?
தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தடை விதித்தது யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும். குறிப்பாக கல்வி அமைச்சு இது தொடர்பான தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.
முதலில் சீண்டுவது… தடுப்பது… பிறகு “இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வோம்” என்பதெல்லாம் இனியும் தொடரக்கூடாது.
இதுபோன்ற அவசியமற்ற சிக்கல்களை ஏற்படுத்தி, குழப்பம் விளைவிப்பவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைதான் மீண்டும் இப்படி நிகழாமல் இருப்பதை உறுதி செய்யும்.
எந்த நேரமும் ஏதாவது ஒரு பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அதனை நோக்கி இந்திய சமுதாயம் அல்லாடி கொண்டிருக்க வேண்டும். வேறு எந்த முன்னேற்றக் காரணமான திட்டங்களிலும் இந்திய சமுதாயம் ஈடுபடக்கூடாது என அரசாங்க அதிகாரிகள் திட்டமிட்டு விட்டார்களா? என்கிற அச்சம் எழுகிறது.
இதுபோன்ற பிரச்சனைகள் தொடராமல் இருப்பதற்கு அரசாங்கம் திட்டவட்டமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மேனாள் தலைவரும் மலேசியத் தமிழ் அமைப்புகளின் பேரவைத் தலைவருமான திரு.பெ.இராஜேந்திரன் கேட்டுக்கொண்டார்.