Home வணிகம்/தொழில் நுட்பம் மாஸ் அறிவித்த ‘பக்கெட் லிஸ்ட்’ சலுகையால் பெரும் சர்ச்சை!

மாஸ் அறிவித்த ‘பக்கெட் லிஸ்ட்’ சலுகையால் பெரும் சர்ச்சை!

471
0
SHARE
Ad

mas

கோலாலம்பூர், செப்டம்பர் 4 – மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகள் கவர்வதற்காக அறிவித்த ‘மை அல்டிமேட் பக்கெட் லிஸ்ட்’ (My Ultimate Bucket List) என்ற சிறப்பு சலுகைப் போட்டி கடும் எதிர்ப்புகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 6 மாதங்களில் எம்எச் 370 மற்றும் எம்எச் 17 ஆகிய இரு மாஸ் விமானங்களுக்கு நடந்த பேரிடர்கள் ஒட்டுமொத்த நிறுவனத்தையும் புரட்டிப் போட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ள மாஸ் நிறுவனம் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. சில பயணங்களின் கட்டணத் தொகையைப் பெரிதும் குறைத்துள்ள அந்நிறுவனம் சில சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தங்கள் நிறுவன விற்பனையைப் புதுப்பிப்பதற்காக அங்குள்ள முகவர்களுக்கான தரகுத் தொகையை இரு மடங்காக உயர்த்தியுள்ளது. அதேபோல் இணையதளத்தில் அந்நாட்டுப் பயணிகளுக்கான சலுகைப் போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளது.

‘மை அல்டிமேட் பக்கெட் லிஸ்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் போட்டியில் பயணிகள் செல்ல விரும்பும் இடங்களையும், அதற்கான காரணங்களையும் விமான நிறுவனத்தின் போட்டிப் பக்கங்களில் தெரிவிக்கவேண்டும். அதன்பின் நடைபெறும் குலுக்கலில் வெற்றி பெறும் 16 பயணிகளுக்கு ஐபேட் அல்லது மலேசியாவிற்குத் திரும்பும் விமான பயணச்சீட்டு பரிசாக அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

‘பக்கெட் லிஸ்ட்’ (Bucket List) என்ற தொடர் ஒருவர் இறப்பதற்கு முன் செய்யவிரும்பும் செயல்களைக் குறிப்பதால் இது வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இரு பெரும் விபத்துகளில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாகி உள்ள நிலையில் மாஸ் நிறுவனம் அறிவித்துள்ள இந்த போட்டியிலும் இறப்பைக் குறிக்கும் தலைப்பு உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதனைத்தொடர்ந்து மாஸ் நிறுவனம் தனது இணையதள அறிவிப்பில், ‘பக்கெட் லிஸ்ட்’ என்ற வார்த்தைத் தொடரை நீக்கி விட்டு பயணிகள் செய்ய விரும்பும் காரியங்களைக் குறிப்பிடுமாறு வெளியிட்டிருந்தது.