திரிபோலி, செப்டம்பர் 4 – ஆப்பிரிக்க நாடான லிபியாவின் திரிபோலி விமான நிலையத்தில், தீவிரவாதிகள் 11 விமானங்களை கடத்தியுள்ளதாகவும், அதனை தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
லிபியாவில் கடந்த 34 ஆண்டுகளாக சர்வாதிகாரம் செய்து வந்த கடாபியின் ஆட்சியை, கடந்த 2011-ம் ஆண்டு உள்ளூர் போராட்டக்குழுக்கள் முடிவுக்கு கொண்டு வந்தன.
அதனைத் தொடர்ந்து அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடந்து ஜனநாயகம் நிறுவப்பட்ட போதிலும் கடந்த மூன்றாண்டுகளாக லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள விமான நிலையம் ஜிண்டான் தீவிரவாதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
இந்த விமான நிலையத்தைக் கைப்பற்றும் நோக்கில் மிஸ்ரதா இஸ்லாமிய போராட்டக் குழு, கடந்த ஒரு மாத காலமாக ஜிண்டான் தீவிரவாதக் குழுவுடன் போரிட்டு வந்தது. இந்த சண்டையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விமான நிலைய சொத்துகள் சேதமடைந்தன.
பெரும் சண்டைக்குப் பிறகு மிஸ்ரதா இஸ்லாமிய தீவிரவாதக்குழு விமான நிலையத்தை கைப்பற்றி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் இந்த விமான நிலையத்திலிருந்த 11 பயணிகள் விமானங்கள் மாயமாகி உள்ளதாகவும், அதனை தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்த கடத்தி இருக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி விமானங்களின் மூலம் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தாக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.