திரிப்போலி (லிபியா) – லிபியாவின் மேற்குக் கடற்கரையோரத்தில் சட்டவிரோத அகதிகள் 60 பேரின் சடலங்களை லிபியாவின் செம்பிறைச் சங்கம் கண்டெடுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.
அகதிகளின் படகு ஒன்று வியாழக்கிழமையன்று கவிழ்ந்ததில் இவர்கள் மரணமடைந்திருக்கலாம் என்றும், இவர்களில் பெண்கள், குழந்தைகள் ஆகியோரும் அடங்குவர் என்றும் லிபியாவின் செம்பிறைச் சங்கப் பேச்சாளர் ஒருவர் அறிவித்தார்.
அந்தப் படகு சுமார் 250 பேர்களை ஏற்றிச் சென்றதாக நம்பப்படுவதால், மேலும் பல சடலங்கள் கண்டெடுக்கப்படலாம் என்றும் செம்பிறைச் சங்கம் தெரிவித்திருக்கிறது. இதுவரையில் 140 பேர் காப்பாற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்த ஜக்கிய நாட்டு சபையின் அகதிகளுக்கான ஆணையம், மேலும் 100 பேரைக் காணவில்லை என்றும் கூறியது.
லிபியாவில் நீடித்துவரும் குழப்பம், பாதுகாப்பற்ற தன்மை காரணமாக, ஐரோப்பிய நாடுகளுக்கு மெடிட்டரேனியன் கடல்வழியாக செல்ல விரும்பும் அகதிகள் லிபியத் தலைநகர் திரிப்போலியை புறப்பாட்டுத் தளமாகக் கொண்டு செயல்படுகின்றனர். இவர்களில் பலர் தங்களின் படகுகள் நடுக்கடலில் கவிழ்வதால் உயிரிழக்கின்றனர்.