Home தொழில் நுட்பம் வாட்ஸ் அப் -க்கு போட்டியாக ஆப்பிளின் புதிய செயலி!

வாட்ஸ் அப் -க்கு போட்டியாக ஆப்பிளின் புதிய செயலி!

641
0
SHARE
Ad

whatsappகோலாலம்பூர், செப்டம்பர் 5 – கடந்த சில வருடங்களாக குறுந்தகவல் அனுப்பும் முறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஒரு செயலி ‘வாட்ஸ் அப்’ (Whatsapp) ஆகும். எழுத்து முறைகளில் மட்டும் இருந்த குறுந்தகவல் பரிமாற்றங்களை முற்றிலும் மாற்றி எழுத்து மட்டும் அல்லாமல் ஒலி ஒளித் துணுக்குகளை அனுப்பும் வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் வாட்ஸ் அப்-க்கு கிடைத்த பெரும் வரவேற்பு மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களை வியப்பில் ஆழ்த்தியது. அதேபோன்ற செயலியினை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐஒஎஸ் 8 இயங்குத்தளத்தில் ‘மெஸ்ஸேஜஸ் ஆப்’ (Messages app) என்ற புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த புதிய வசதியில் பயனர்கள் குறுந்தகவலை எழுத்து வடிவில் அல்லாமல் வாட்ஸ் ஆப் போன்று ஒலித்துணுக்குகள் வடிவில் அனுப்ப முடியும். இந்த செயலியை திறன்பேசிகளில் நிறுவியவுடன், திரையில் தோன்றும் சிறய அளவிலான ‘ஒலிவாங்கி’ (Microphone)-ன் சின்னத்தை தொடுதல் மூலமாக பயனர்கள் தங்களின் ஒலிப் பதிவினை தொடங்கலாம். தேவையான பதிவுகள் முடிந்தவுடன் அதனை மற்ற பயனர்களுக்கு அனுப்ப முடியும்.

#TamilSchoolmychoice

மேலும், ஒலிப்பதிவுகள் முடிந்தவுடன் பயனர்கள் அதனை முன்னோட்டமாக கேட்க முடியும். எனினும் பதிவு செய்யப்பட்ட ஒலித்துணுக்குகளில் மாற்றங்களை செய்யும் வசதி தற்போது இல்லை. விரைவில் அதுபோன்ற வசதியினை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் ஆப்பிள் அறிமுகப்படுத்தி உள்ள இந்த வசதி வாட்ஸ் ஆப்பிற்கு போட்டியாக இருக்குமா என்பது கேள்விக்குறி தான். அனைத்து திறன்பேசிகளிலும் வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்த முடியும். அதேபோல் வாட்ஸ் ஆப் செயலியில் பயனர்கள் ஒலித் துணுக்குகள் மட்டும் அல்லாது, காணொளிகள், எழுத்து வடிவிலான குறுந்தகவல்கள் என அனைத்து வசதிகளையும் பெற முடியும். எனவே ஆப்பிள் அறிமுகப்படுத்திய இந்த புதிய செயலிக்கு, பயனர்கள் மத்தியில் எத்தகைய வரவேற்பு உள்ளது என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.