நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் புனித ஆரோக்கிய மாதா எழுந்தருள பக்தர்களின் கூட்டத்திற்கு மத்தியில் மெல்ல தேர் ஊர்ந்து சென்றது.
பெரிய தேரின் முன்னால் 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல் சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரிய மாதா, ஆரோக்கிய மாதா ஆகியோர் எழுந்தருளி பவனி சென்றனர்.
சில தெருக்களைக் கடந்து பேராலய முகப்பை தேர் வந்தடைந்தது. விழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆரோக்கிய மாதாவை வழிபட்டனர்.
முன்னதாக மாலை 5.15 மணி அளவில் பேராலய கலையரங்கில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
இன்று (8ம்தேதி) ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றுடன் அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. தேர் ஊர்வலத்தின் போது காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு வழங்கினர்.
அன்னை வேளாங்கண்ணி ஆலயம் விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அழகுடனும் வண்ணமயமாகவும் திகழ்ந்தது.