கோலாலம்பூர், செப். 8 – எம்எச் 17 துயரச் சம்பவத்தில் பலியான மேலும் இரு மலேசிய பயணிகளின் நல்லுடல்கள் நாளை செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைகின்றன.
ஷெல் நிறுவன ஊழியர் டம்பி ஜியி (49 வயது) மற்றும் ஒரு வயதே ஆன பெஞ்சமின் லீ ஆகிய இருவரது சடலங்களும் விமான நிலையத்தில் உள்ள பூங்கா ராயா வளாகத்தை காலை 8.30 மணிக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நல்லுடல்களுக்கும் முழு ராணுவ மரியாதை அளிக்கப்படும் எனப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் (படம்) தெரிவித்தார்.
டம்பி ஜியின் நல்லுடல் பின்னர் அரச மலேசிய விமானப் படை விமானம் மூலம் கூச்சிங் கொண்டு செல்லப்படும் என்றும், பெஞ்சமின் லீயின் சடலம் செராஸ் கொண்டு செல்லப்பட இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
இவ்விரு நல்லுடல்களையும் சேர்த்து இதுவரை 35 மலேசிய பயணிகளின் நல்லுடல்கள் மலேசியா கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றுள் இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவர் மற்றும் டச்சு நாட்டைச் சேர்ந்த இருவரது சடலங்களும் அடங்கும்.
பலியானவர்களில் இதுவரை 199 பயணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் 99பேரை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக லியோவ் தியோங் லாய் கூறினார்.
“பலியான 43 மலேசியர்களில் 34 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களில் 14 பேர் எம்.எச் 17 விமானப் பணியாளர்கள், மற்ற 20 பேர் பயணிகள். மேலும் 9 பேரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்தச் சிக்கலான தருணத்தில் பலியானவர்களின் குடும்பத்தாரின் தனிமையை,உணர்ச்சிகளை அனைத்து மலேசியர்களும் மதிக்க வேண்டும். நெருக்கமானவர்களை இழந்து வாடும் அவர்களுக்கு, இந்த துயரம் மிகுந்த இழப்பில் இருந்து மீண்டு வருவதற்குரிய தைரியமும் சக்தியும் கிடைக்க நாம் பிரார்த்திப்போம்,”என்றும் லியோவ் தியோங் லாய் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் பலியான அனைத்துப் பயணிகளின் சடலங்களும் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவதை மலேசியா உறுதி செய்யும் என்று குறிப்பிட்ட அவர், இதற்காக தனது அனைத்துலக நட்பு நாடுகளின் குறிப்பாக நெதர்லாந்து அரசுடன் மலேசியா அணுக்கமாகச் செயல்படும் என்றார்.