கொழும்பு, செப்டம்பர் 8 – 24 ஆண்டுகள் கழித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, 2 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். கொழும்புக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவரை, இலங்கை அதிபர் ராஜபக்சே நேரில் வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து, கொழும்பில் உள்ள பண்டாரநாயகே அனைத்துலக விமான நிலையத்தில் ஜப்பான் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட 2-ம் கட்ட மேம்பாட்டு பணிகளை ராஜபக்சேவுடன் இணைந்து அபே தொடங்கி வைத்தார்.
இலங்கைக்கு அதிக அளவு நிதியளிக்கும் நாடாக ஜப்பான் உள்ளது. மனித உரிமை மீறல் பிரச்சனையில், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, ஜப்பான் நடுநிலை வகித்தது.
கடந்த 24 ஆண்டுகளில், இலங்கை செல்லும் ஜப்பானின் முதல் பிரதமர் ஷின்சோ அபே ஆவார். தெற்காசியக் கண்டத்தில், ஜப்பானின் எதிரி நாடாக கருதப்படும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், அவரது இலங்கைப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.