Home நாடு ஒரு பெயரை மட்டுமே பரிந்துரைப்பதா? – பாஸ், பிகேஆர் தலைமைக்கு சுல்தான் கடும் கண்டனம்

ஒரு பெயரை மட்டுமே பரிந்துரைப்பதா? – பாஸ், பிகேஆர் தலைமைக்கு சுல்தான் கடும் கண்டனம்

976
0
SHARE
Ad

Selangor Sultanகிள்ளான், செப். 8 – மந்திரி பெசார் பதவிக்கு ஒரு பெயரை மட்டுமே பரிந்துரை செய்துள்ள பாஸ் மற்றும் பிகேஆர் தலைமைக்கு சிலாங்கூர் சுல்தான் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மந்திரி பெசார் பதவிக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களைப் பரிந்துரை செய்யுமாறு பக்காத்தான் கூட்டணியில் உள்ள 3 கட்சிகளுக்கும் கடந்த 27ஆம் தேதி சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா உத்தரவிட்டிருந்த நிலையில், பாஸ் மட்டுமே அந்த உத்தரவுப்படி 3 பெயர்களை பரிந்துரைத்து இருப்பதாக, சுல்தானின் தனிச்செயலர் டத்தோ முகமட் முனிர் பனி தெரிவித்துள்ளார்.

“டத்தோஸ்ரீ வான் அசிசா பெயரை மட்டுமே பரிந்துரை செய்திருப்பதன் மூலம், மேன்மை தங்கிய சுல்தானின் கட்டளையை ஏற்றுச் செயல்படாத பிகேஆர் மற்றும் ஐசெக மீது அவர் மிகுந்த வருத்தத்தில் உள்ளார். இத்தகைய செயல்பாட்டின் மூலம் அரச அமைப்புக்கு எதிராக இரு கட்சிகளும் அகங்காரத்துடனும், சுல்தானுக்கு விசுவாசம் இன்றியும் (துரோகம் இழைக்கும் விதமாகவும்) நடந்து கொண்டுள்ளன” என்று முனிர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அரண்மனையின் வழக்கமான நடைமுறைதான்

மந்திரி பெசார் பதவிக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களைப் பரிந்துரை செய்யுமாறு சுல்தான் கோரியிருப்பது, அரண்மனை பின்பற்றி வரும் வழக்கமான நடைமுறைதான் என்று முனிர் கூறியுள்ளார்.

“அப்போதுதான், அதிகமானோரின் ஆதரவு மட்டுமல்லாது அனைத்து வகையான ஆற்றல்,
அனுபவம் மற்றும் ஒருங்கிணைக்கும் தன்மை கொண்ட பொருத்தமான ஒருவரை பதவிக்கு
தேர்வு செய்ய இயலும். மாநில அரசாங்கத்தின் நிர்வாகம் சுமுகமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய, இத்தகைய அம்சங்கள் மிக முக்கியமானவை,” என்று குறிப்பிட்டுள்ள முனிர், பக்காத்தான் கூட்டணியில் பலருக்கு தலைமைத்துவ தகுதிகள்
இருக்கிறது என சுல்தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், தம்மிடம் பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு பெயரையும் சுல்தான் கவனமாகப் பரிசீலிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

“மந்திரி பெசாராக யாரை நியமிப்பது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சுல்தானிடம்தான்  உள்ளது. எனவே பக்காத்தானைச் சேர்ந்த எந்த உறுப்பினருக்கு தகுதி  உள்ளது, சிலாங்கூர் சட்டமன்றத்தில் அதிக ஆதரவுள்ளது என்று அவர் பரிசீலிப்பார்,”  என்று முனிர் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.