Home அவசியம் படிக்க வேண்டியவை “நட்சத்திரா பேஷன்ஸ் உங்களை நட்சத்திரங்களாக மாற்றும்” – சாரதா சிவலிங்கம் நேர்காணல்

“நட்சத்திரா பேஷன்ஸ் உங்களை நட்சத்திரங்களாக மாற்றும்” – சாரதா சிவலிங்கம் நேர்காணல்

794
0
SHARE
Ad
Saradha Sivalingam 1

கோலாலம்பூர், செப்டம்பர் 18 – மலேசியக் கலைத்துறையில் மிகப் பிரபலமானவர் சாரதா சிவலிங்கம். ஒரு நடிகையாக, இயக்குநராக, வடிவமைப்பாளராக தனது திறமைகளை நிரூபித்து வந்தவர், தற்போது நட்சத்திரா பேஷன்ஸ் என்ற நிறுவனத்தையும் தொடங்கி ஆடை வடிவமைப்பு மற்றும் விற்பனைகளிலும் சிறப்பாக இயங்கி வருகின்றார்.

தனது கணவரான இயக்குநர் கலைச்செல்வன் மற்றும் மகன்  சிவேஷுடன் மிக இனிமையான ஒரு வாழ்வில் இருந்தாலும், ஏதாவது ஒரு புதுமையான விசயங்களை செய்து கொண்டே இருப்பதில் சாரதா மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் கே.எஸ் மூவீஸ் என்ற தனது நிறுவனம் மூலமாக அவர் இயக்கிய ‘அப்பா செல்லம் ஐஸ்வர்யா’ என்ற தொலைக்காட்சித் தொடர் அஸ்ட்ரோவில் வெளியிடப்பட்டு மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

#TamilSchoolmychoice

அதன் பின்னர் நாடகங்கள் இயக்குவதில் இருந்து சற்றே விலகி இருந்தவர் தற்போது ஒரு தொழிலதிபராகவும் உருவெடுத்துள்ளார்.

சாராதா சிவலிங்கத்துடனான செல்லியலின் பிரத்தியேகப் பேட்டி இதோ:-

செல்லியல்: நட்சத்திரா பேஷன்ஸ் எந்த மாதிரியான வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது?

சாரதா: நாங்கள் வாடிக்கையாளர்களை தரம் பிரித்துப் பார்க்கவில்லை. நட்சத்திரா எல்லா வயதினருக்கும் பொதுவான ஒன்று. வாடிக்கையாளர்களுக்கு விதவிதமான வகைகளில் ஆடைகளை கொடுத்து அவர்களை நட்சத்திரங்களாக அழகுபடுத்திப் பார்ப்பதே எங்களின் நோக்கம். அது தான் எங்களின் மகிழ்ச்சியும் கூட. வாடிக்கையாளர்களை மிகவும் ஸ்டைலாக மாற்றுவதற்கு அவர்களின் உடல் அமைப்பிற்கு ஏற்ற ஆடைகளை நாங்கள் தேர்ந்தெடுத்து கொடுகின்றோம். இது எங்களின் கடமை.

செல்லியல்: திறமையான வடிவமைப்பாளரான நீங்கள் திரைப்படங்களுக்காக பிரத்தியேக ஆடை வடிவமைக்கும் எண்ணம் இருக்கின்றதா?

சாரதா: கலையில் மிகவும் ஈடுபாடு கொண்ட பெண் நான். எனது திறமையை நிரூபிக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கடவுள் ஆசியில் கிடைத்தால் நிச்சயமாக அதை மறுக்கமாட்டேன்.

செல்லியல்: கலைத்துறை, தொழில்துறை இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?

சாரதா: கனவை நோக்கிப் போகும் போது நிச்சயமாக வியர்வைத் துளிகள் பற்றியோ, தூரம் பற்றியோ கவலைப்படக்கூடாது. என்னைப் பொறுத்தவரையில் உங்களின் வேலையை 100 சதவிகிதம் விரும்பி செய்தால் நிச்சயமாக கனவை அடைந்துவிடமுடியும். கலைத்துறை, தொழில்துறை இரண்டையும் சமாளிப்பது சற்று சிரமமாக இருந்தாலும் கூட நான் சரியான பாதையில் போய் கொண்டு இருக்கின்றேன் என்பதை நன்கு உணர்ந்து தான் செய்கின்றேன். அதுமட்டுமின்றி என்னைச் சுற்றி மிக நல்ல உள்ளங்கள் இருக்கின்றனர். அவர்கள் எனக்கு எப்போதும் பக்கபலமாக இருக்கின்றனர். எனது அனைத்து முயற்சிகளுக்கும் ஒரு தூண் போல் என் பின்னால் இருக்கும் எனது கணவருக்கு நான் மிகவும் நன்றியை சொல்லிக்கொள்கின்றேன்.

Saradha Sivalingam

(படங்கள் – எம்எஸ் கலை, ஆடை அணிகலன் – நட்சத்திரா பேஷன்ஸ், ஒப்பனை – சாந்தாஸ் பியூட்டி)

செல்லியல்: கலைத்துறையில் உங்களது படைப்புகள் தொடருமா?

சாரதா: நான் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட எந்த ஒரு துறையில் இருந்தும் பின் வாங்கவில்லை. அதாவது என்னுடைய சினிமா அல்லது தொழில் இரண்டில் இருந்தும் நான் விலகவில்லை. நான் எப்போதும் எனது படைப்புகள் மிக பெரிய அளவில் சிந்திப்பேன். எனவே எனது அடுத்த படைப்பிற்கான திரைக்கதை எழுதி வருகின்றேன். விரைவில் எனது புதிய படம் குறித்து அறிவிப்பேன்.

மலேசியக் கலையுலகில் பெண் இயக்குநர்கள் மிகக் குறைவு தான் என்றாலும், அவர்கள் அனைவரும் மிகத் திறமைசாலிகளாகவே விளங்குகின்றனர். அவர்களில் சாரதா சிவலிங்கமும் ஒருவர்.

சாரதாவின் இயக்கத்தில் வெளிவந்த “யார் குற்றம்”, “அச்சமில்லை” போன்ற குறும்படங்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.

வளர்ந்து வரும் மலேசியக் கலையுலகில் ஒரு தொழிலதிபராகவும், இயக்குநராகவும் சாரதா பல சாதனைகள் செய்ய செல்லியல் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

-ஃபீனிக்ஸ்தாசன்