இஸ்லாமாபாத், செப்டம்பர் 19 – பாகிஸ்தானில் எதிர்ப்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகக் கோரி, எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கான், மதகுரு காதிரி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் போராட்டங்களை நடத்தினர்.
நாடாளுமன்றம் முன்பாக கூடாரங்களை அமைத்து, தினந்தோறும் முற்றுகை போராட்டம் நடந்தது. அவற்றையெல்லாம் நவாஸ் ஷெரீப் நிதானமாக சமாளித்தார்.
பொறுமையிழந்த எதிர்ப்பாளர்கள் நவாஸின் அரசு இல்லத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
தடியடி, கண்ணீர் புகை வெடிகுண்டு வீச்சு என அப்பகுதி போர்க்களமானது. இந்த சம்பவத்தில் போலீசாரின் தாக்குதலுக்கு எதிர்ப்பாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக நவாஸ் ஷெரீப் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி, மதகுரு காதிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், நவாஸ் ஷெரீப் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, நவாஸ் மீது இரண்டாவது முறையாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.முன்னதாக, கடந்த ஜூனில் நடந்த மோதலின்போது, எதிர்ப்பாளர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். அது தொடர்பாக, நவாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.