சென்னை, செப்டம்பர் 22 – பெரிதும் எதிர்பார்க்கப்படும் கமல்ஹாசனின் அடுத்த படமான “பாபநாசம்” படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. எப்போதுமே, கமல்ஹாசன் ஒரு படத்தைத் தொடங்கி, அதனை முடித்து வெளியிட்டு விட்டுத்தான் அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபடுவார்.
ஆனால், தற்போது அந்த மரபிலிருந்து மாறி, வரிசையாகப் படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகின்றார். அவரது சொந்தத் தயாரிப்பான “விஸ்வரூபம் 2” படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் நிலையில், அடுத்த படமான “உத்தம வில்லன்” படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகின்றது.
விஸ்வரூபத்திற்கு முன்னதாக உத்தம வில்லன் வெளியாகலாம் என்ற பேச்சும் சினிமா வட்டாரங்களில் உலவி வருகின்றது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க, பிரபல நடிகரும் கமலின் நெருக்கமான நண்பர்களில் ஒருவருமான ரமேஷ் அரவிந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இதற்கிடையில், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ என்ற படத்திலும் கமல் ஆர்வம் காட்ட, அந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பு ‘பாபநாசம்’ என்ற பெயரில் தற்போது படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
பாபநாசம் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படும் காட்சிகளை இங்கே காணலாம்:
திரிஷ்யம் இயக்கிய அதே மலையாளப்பட இயக்குநர் ஜித்து ஜோசப் ‘பாபநாசம்’ படத்தின் இயக்கத்தையும், திரைக்கதையையும் கவனிக்கின்றார். தமிழ் நாட்டு சூழலுக்கேற்ப படத்தின் கதையமைப்பும் மாற்றப்பட்டுள்ளதாம்.
1940-50 ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியராக இருந்தவர் பாபநாசம் சிவன். அவரது பெயரைத் தொடர்ந்துதான் பாபநாசம் என்ற ஊரும் தமிழ்ப்பட உலகில் பிரபலமடைந்தது.
இப்போது அந்த ஊரை பிரபலத்துவது கமலஹாசனின் முறை போலும். இந்தப் படத்தில் திருநெல்வேலித் தமிழ் பேசி கமல் நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கு முன்னர் தசாவதாரம் படத்தில் நெல்லைத் தமிழ் பேசி நடித்த கமல், பாபநாசம் படத்தில் படம் முழுக்க நெல்லைத் தமிழ் பேசி நடிப்பார் எனத் தெரிகின்றது.
கமல் படத்திற்காக முதன் முதலாக இசையமைக்கின்றார் புதியவர் எம்.ஜிப்ரான். இவர் ஏற்கனவே,‘வாகை சூடவா’ படத்திற்காக இனிமையான பாடல்களை வழங்கி கமலையும் நம்மையும் கவர்ந்தவர். பாடல்களை நா.முத்துகுமார் எழுகின்றார்.
திரையரங்குக்குள் படமாக்கப்படும் ஒரு காட்சி. கமலுடன் அவருக்கு மகளாக நடிப்பவரும், அருகில் கௌதமியும். இந்தப் படத்தில் நடுத்தர வயது தந்தையாக கமல் நடித்திருக்கின்றார்.
பாபனாசம் படப்பிடிப்பில் கௌதமியும், அவருக்கு மகளாக நடிக்கும் நடிகையும்….
திறந்தவெளி உணவு விடுதியில் கமல் குடும்பத்தோடு இரவு உணவு உண்பது போல் படமாக்கப்படும் காட்சி…