ஷா ஆலம், செப்டம்பர் 23- கடந்த சில மாதங்களாக சிலாங்கூர் மாநில ஒரு கலக்கு கலக்கிய சிலாங்கூர் மந்திரிபெசார் டான்ஸ்ரீ காலிட்டிற்கு நேற்று மாநில தலைமைச் செயலகக் கட்டிடத்தில் கூடியிருந்த ஏராளமான அரசு ஊழியர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பிரியாவிடை அளித்து வழியனுப்பினர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) புதிய மந்திரி பெசார் பொறுப்பேற்க உள்ள நிலையில், தனது அலுவலகத்தில் கடைசி நாள் அலுவல்களைக் கவனித்தார் காலிட்.
பிரியாவிடை உபசரிப்பின்போது கூடியிருந்தோர் மத்தியில் பேசிய அவர், அரசு ஊழியர்கள் கடினமாகவும் அக்கறையுடனும் உழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் எந்தவித அரசியல் நிர்பந்தங்களுக்கும் அடிபணிய வேண்டாம் என்று குறிப்பிட்ட அவர், சிலாங்கூர் மாநிலத்திற்காக முழு பொறுப்புணர்வுடன் கடமையாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
“சில தருணங்களில் நான் கடுமையாக நடந்து கொண்டதாக நினைத்திருக்கலாம். ஆனால் நல்ல நோக்கத்துடனேயே அவ்வாறு நடந்து கொண்டேன். சிலர் பேசி முடிக்கும் முன்பே எனது கருத்துக்களைக் கூறியிருப்பேன். ஆனால் அதையும் நேர்மையாகவே செய்தேன்,” என்று பலத்த கரவொலிகளுக்கிடையே காலிட் கூறினார்.