பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர், 23 – மந்திரி பெசாராகப் பதவியேற்க, பிகேஆர் கட்சி தன்னை ஏகமனதாக ஆதரித்து உள்ளதாக அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி (படம்) தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலியை நியமிக்க அரண்மனை முடிவு செய்துள்ள நிலையில், பிகேஆர் அரசியல் விவகாரக் குழுவின் அவசரக் கூட்டம் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஸ்மின் அலி, தமக்கு ஆதரவு வழங்கியதற்காக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசாவுக்கும், கட்சியின் ஒட்டு மொத்த தலைமைக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
கட்சியிலுள்ள அனைவரது ஆதரவும் கிடைத்துள்ளதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “ஆமாம்… முழுமையான ஆதரவுள்ளது,” என்றார்.
“செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இஸ்தானா ஆலம் ஷாவில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வருமாறு அரண்மனையில் இருந்து எனக்குக் கடிதம்
வந்துள்ளது. அக்கடிதம் கிடைத்தவுடன் கட்சியின் ஆலோசகர் அன்வார்
இப்ராகிமிடம் அதுகுறித்து தெரிவித்தேன்,” என்றார் அஸ்மின் அலி.
திங்கட்கிழமை நடைபெற்ற பிகேஆர் அரசியல் விவகாரக் குழு கூட்டத்திற்கு வான்
அசிசா தலைமை வகித்தார்.
மந்திரி பெசார் பதவிக்கு வான் அசிசா புறக்கணிக்கப்பட்டது தொடர்பில் கடிதத்தில் ஏதும் காரணம் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு, “அதுகுறித்து எந்த விவரமும் இல்லை” என்று அஸ்மின் அலி மேலும் தெரிவித்தார்.