இலங்கை மேல்மாகாண சபை அமைச்சரானா உதய கம்மன்பிலா நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளதாவது:-
“இந்தியா-இலங்கை தொடர்பான விவகாரங்களில் தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த ஜெயலலிதா தொடர்ந்து தலையிட்டுக் கொண்டே இருந்தார். இது அவருக்கு தேவையற்ற ஒன்று. இலங்கை தொடர்பான விவகாரங்களில் இந்திய மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இலங்கை தொடர்பாக அவர் அளித்த ஆலோசனைகள் தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளன. இங்கு இருப்பவர்களை சிறையில் அடைக்க கடுமையாகப் போராடினார். ஆனால் தற்போது அவரே சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்”
“இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவுக்கு இந்திய குடியரசுத் தலைவரின் பொதுமன்னிப்பு கிடைக்கக் கூடாது.
ஜெயலலிதாவுக்கு கிடைத்துள்ள தண்டனை மூலம் இந்திய-இலங்கை உறவில் இருந்த பெரும் தடை அகன்று விட்டது. இனி இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பொற்காலம் மலரும் என்று நான் நம்புகின்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா கைது விவகாரத்தில் ஏற்கனவே பிரச்சனைகள் நெருப்பாக இருக்கும் நிலையில், இலங்கை அமைச்சர் ஜெயலலிதா குறித்து கூறியுள்ள கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.