Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘யான்’ – அபாரமான ஒளிப்பதிவு, மனதை வருடும் இசை!

திரைவிமர்சனம்: ‘யான்’ – அபாரமான ஒளிப்பதிவு, மனதை வருடும் இசை!

739
0
SHARE
Ad

Yaan-Movie-Stills-10கோலாலம்பூர், அக்டோபர் 2 –  ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்குநராக உருவெடுத்தது போல், பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்குநராகும் ஆசையில், ஜீவா, துளசி, நாசர், ஜெயப்பிரகாஷ் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யான்’.

‘உயிரே’ படத்தில் சாருக்கான் மனீசா கொய்ராலாவின் கையைப் பிடித்துக் கொண்டு “இருபூக்கள் கிளைமேலே” என்ற பாடல் காட்சியில் ஓடுவாரே? …

அதே போல், ‘யான்’படத்தின் தொடக்கத்திலேயே துளசியின் கையைப் பிடித்துக் கொண்டு, ஒரு அதிரடி சண்டைக் காட்சியில், துப்பாக்கி குண்டுகள் தெறிக்க ஓடுகிறார் ஜீவா.

#TamilSchoolmychoice

அட அட… அந்த பாடலின் பின்னணி இசையும், காட்சிகளும் நம்மை இருக்கையின் விளிம்பிற்கே கொண்டு வந்து நமது எண்ணத்தில் படம் பற்றிய பல மடங்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றது.

மும்பை நகரத்தையும், அதன் அழகையும் கேமரா அவ்வளவு அழகாகப் படம் பிடித்திருக்கின்றது. குறிப்பாக ஜீவாவையும், துளசியையும் இதை விட அழகாக வேறு படத்தில் காட்டியிருக்கிறார்களா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு இருவரும் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அழகு.

ஆனால், பார்த்துப் பழகிய கதையும், சொதப்பிய திரைக்கதையும், தென்பட்ட பல படங்களின் கதாப்பாத்திர சாயல்களும் சற்றே சலிப்பை ஏற்படுத்துவதை தடுக்க முடியவில்லை.

என்றாலும், மனுஷ் நந்தனின் துல்லியமான ஒளிப்பதிவும், ஹாரீஸ் ஜெயராஜின் ரசிக்கவைக்கும் பின்னணி இசை மற்றும் பாடல்களும் தான் நம்மை இறுதி வரை இருக்கையில் உட்கார வைக்கின்றது.

‘யான்’ படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கின்றார். மறைந்த கவிஞர் வாலி, கபிலன், பா.விஜய், தாமரை ஆகியோர் பாடல் வரிகள் எழுதியுள்ளனர்.

உன்னிக்கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ, சின்மயி, கானா பாலா உள்ளிட்ட முன்னணிப் பாடகர்கள் பாடியுள்ளனர்.

Yaan-first-look-postersகதைச்சுருக்கம்

எம்பிஏ பட்டதாரி ஜீவா வேலை வெட்டியில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். துளசியை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வயப்படுகின்றார். துளசி பின்னால் அலையோ அலைனு அலைஞ்சு காதல் வசப்படுத்துகின்றார்.

துளசி அப்பா நாசர் ரொம்ப கண்டிப்பானவர். வேலை இருந்தால் மட்டுமே தன் பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பேன் என்று கூறி அவமானப்படுத்துகின்றார். இது தவிர, ‘ஆசை’ பிரகாஷ் ராஜ் பாணியில் நடிகர் ரிஷி துளசிக்கு வலை விரித்து ஜீவாவை அவளிடமிருந்து பிரிக்க நினைக்கிறார்.

இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்க வேலை தேடி வெளிநாடு செல்லும் ஜீவாவிற்கு, அங்கு ஒரு மிகப் பெரிய சோதனை வருகின்றது. அதிலிருந்து ‘தாம் தூம்’ ஜெயம் ரவி போல, ‘மரியான்’ தனுஷ் போல எப்படி மீண்டு வந்து தனது காதலியுடன் இணைக்கின்றார் என்பதே இரண்டாம் பாதிக் கதை.

நடிப்பு

படத்தில் ஹீரோ எண்ட்ரி பாடலுக்குப் பிறகு, ஜீவா படு ஜாலியான ஆள் ஆகிவிடுகின்றார்.

“ஏய் என்னா நெக்கலா?” என்று காதலியை பார்த்து திமிராகக் கேட்கும் ரிஷ்க் பாஸ்கராகவே பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் சற்றே வித்தியாசமாக ‘மௌன ராகம்’ கார்த்திக்கின் சாயலில் நடிக்கவும் முயற்சி செய்திருக்கின்றார்.

துளசி கொடுத்த பிசினஸ் கார்ட் கையிலிருந்து காற்றில் பறக்க அதை பிடிக்க ஜீவா கொடுக்கும் முகபாவனைகள் அழகு.

‘ஆத்தங்கரை ஓரத்துல’ பாடலில் அற்புதமான நடனம், அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் என ஜீவாவின் நடிப்பு ரசிக்க வைக்கின்றது.

படம் முழுவதும் நம்மை கவர்வது துளசி தான். சற்றே பருமனாக இருந்தாலும் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறார்.

80 களில் நடிகை அம்பிகா, நடிகை ராதா சகோதரிகள் நடிப்பில் கொடிகட்டிப் பறந்தார்கள். அம்பிகாவிற்கு பின்னால் வந்தாலும் நடிகை ராதா தனது சகோதரியைவிட மிகப் பிரபலமாகப் பேசப்பட்டார்.

குணச்சித்திர கதாப்பாத்திரமாக இருந்தாலும், கவர்ச்சியான கதாப்பாத்திரமாக இருந்தாலும் ராதா தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.

அந்த வகையில், தற்போது நடிகை ராதாவின் இரண்டு மகள்களான கார்த்திகாவும், துளசியும் மிக அற்புதமாக நடிக்கின்றனர். கார்த்திகாவை விட துளசி நடிப்பில் மிஞ்சினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதுதவிர, நாசர், ஜெயப்பிரகாஷ், ‘மெட்டிஒலி’ போஸ், தொலைக்காட்சி நடிகர் ரிஷி, தம்பி இராமையா, கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பு வெகுவாகக் கவர்கின்றது.

Yaanஒளிப்பதிவு மற்றும் இசை

மும்பை நகரம் அயல் நாடுகளைப் போல் மனுஷ் நந்தனின் கேமரா கைவண்ணத்தில் பளீச் என்று தெரிகின்றது.

ஜீவா, துளசி அணிருந்திருந்த வண்ண உடைகள், ஜீவா வீடு, துளசி வீடு என ஒவ்வொன்றும் திரையில் அவ்வளவு அழகாக தெரிகின்றது.

படத்தின் இரண்டாம் பாதி அந்தமான் தீவுகள், ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் படமாக்கியுள்ளார்கள். பாலைவனக் காட்சிகள், குறுக்கு நெடுக்கு சந்துகள் பிரமிக்க வைக்கின்றன.

மேலும் படத்தில் கண்களுக்கு குளிர்ச்சியாக இரண்டு பாடல்காட்சிகளை சுவிட்சர்லாந்தில் படமாக்கியுள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை மனதை உருக்குகின்றது. உன்னிக்கிருஷ்ணன் குரலில் ‘நெஞ்சே நெஞ்சே’ பாடல், கானா பாலா குரலில் ‘ஆத்தங்கரை ஓரத்துல’ பாடல் அற்புதம்.

‘நீ வந்து போனது’, ‘லட்சம் கலோரி’, ‘லம்பா லம்பா’ பாடல் ரசிக்கும் ரகம்.

yaan-movie-latest-stills-30சொதப்பிய திரைக்கதை

முதல் பாதியில் ஜீவாவின் கலகலப்பான நடிப்பால் தொடங்கும் திரைக்கதை, தொலைக்காட்சி நடிகர் ரிஷி (ராம் கதாப்பாத்திரம்) வரவுக்குப் பின் மேலும் எதிர்பார்ப்புடன் நகருகின்றது.

துளசியை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படும் ரிஷி, அவளது காதலன் ஜீவாவிற்கு வில்லனாகி, இருவருக்கும் மோதல் என படம் நகர்ந்து கொண்டிருக்கும் போது திடீரென ரிஷி கதாப்பாத்திரம் நீர்த்துப் போய்விட, இரண்டாம் பாதியில் கதை வேறு திசையில் பயணிக்கின்றது.

அரபு நாடு, போதை மருந்து கடத்தல், தலைவெட்டி தண்டனை என்று சிறையில் அடைக்கப்பட்ட ஜீவாவைச் சுற்றி ஒரு உண்மை சம்பவம் போல் தோற்றத்தை ஏற்படுத்தும் திரைக்கதை, திடீரென அவரை ஹீரோயிசம் செய்ய வைத்து ஒற்றை ஆளாய் அத்தனை எதிரிகளையும் சமாளிக்கும் கமர்சியல் சினிமாகிவிடுகின்றது.

அதிலும், ஜீவா சிறையிலிருந்து தப்பிப்பது, கடத்தல் கும்பலிடம் தப்பிப்பது, கிளைமாக்ஸ் காட்சியில் பாலைவனத்தில் நடக்கும் சண்டைக்காட்சிகள் போன்றவை ஏற்கனவே பார்த்துப் பழகிய ஹீரோயிச சாகசங்கள்.

அபாரமான ஒளிப்பதிவு, வசியப்படுத்தும் இசையுடன், ஒரு சரியான பாதையில் பயணிக்கும் திரைக்கதை மட்டும் அமைந்திருந்தால் நிச்சயமாக ‘யான்’  நம் நினைவில் என்றும் நின்றிருக்கும்.

– ஃபீனிக்ஸ்தாசன்

‘யான்’ முன்னோட்டம்: