சென்னை, அக்டோபர் 9 – ‘மெட்ராஸ்’ படத்திற்கு ‘எவிடன்ஸ்’ என்ற மனித உரிமை அமைப்பினர் விருது வழங்கியுள்ளனர். அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘மெட்ராஸ்’.
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகை கேத்ரீன் தெரசா நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். வடசென்னையை மையப்படுத்தியும், வடசென்னையில் வாழும் மக்களை மையப்படுத்தியும் எடுக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினியும், இயக்குனர் வசந்தபாலனும் ரஞ்சித்துக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மதுரையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ‘எவிடன்ஸ்’ என்ற மனித உரிமை அமைப்பினர் படத்தை பார்த்து பாராட்டி, எவிடன்ஸ் விருதை வழங்கியுள்ளனர்.
#TamilSchoolmychoice
அடித்தட்டு மக்களின் நல்வாழ்வுக்காக லாபநோக்கின்றி உழைத்து வரும் இந்த அமைப்பு, ‘மெட்ராஸ்’ படத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அழகாக சொல்லியுள்ள ரஞ்சித்தை கௌரவிக்க ஏற்பாடும் செய்துள்ளது.
இதுகுறித்து ரஞ்சித் கூறும்போது, “அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்டு வரும் எவிடன்ஸ் அமைப்பு, மெட்ராஸ் படத்தை பாராட்டி , எவிடன்ஸ் விருதை வழங்கியுள்ளதை பெருமையாக கருதுகிறேன். மதுரையில் உள்ள முக்கியமான அமைப்பு எவிடன்ஸ்.”
“இந்த நிறுவனம் தனது செயல்பாடுகளுக்கு எனது மெட்ராஸ் படம் உதவியாக இருக்கும் என்று கருதுவது எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இதற்காக அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார் இயக்குநர் ரஞ்சித்.