Home அவசியம் படிக்க வேண்டியவை திரைவிமர்சனம்: ‘மெட்ராஸ்’ – சுவற்றில் வரையப்பட்ட அழகிய சித்திரம்

திரைவிமர்சனம்: ‘மெட்ராஸ்’ – சுவற்றில் வரையப்பட்ட அழகிய சித்திரம்

552
0
SHARE
Ad

10422375_665244203583720_7858279485821037584_nகோலாலம்பூர், செப்டம்பர் 26 – ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சுவருக்கு பின்னால் இப்படி ஒரு அரசியல் அதிகார வர்க்கத்தின் கதையா? என்று வியக்கவைக்கும் வகையில், ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அக்மார்க் வடசென்னை வாசிகளின் வாழ்க்கைச் சூழலை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

‘அட்டக்கத்தி’ -க்குப் பிறகு பா.ரஞ்சித், நடிகர் கார்த்தியை வைத்து இயக்கியிருக்கும் இரண்டாவது படம் ‘மெட்ராஸ்’. ஸ்டூடியோ கிரீன் தயாரித்திருக்கின்றது. ஜி.முரளியின் ஒளிப்பதிவில் வடசென்னையின் மூலை முடுக்குகள் அத்தனையும் படம் பார்ப்பவர்களுக்கு அத்துப்படியாகும் அளவிற்கு கேமரா ஒவ்வொரு வீதிகளிலும் சுழற்றியடித்திருக்கின்றது.

படத்தில் ஒவ்வொரு ஃபிரேமிற்கும், சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை கச்சிதமாகப் பொருந்தி படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கதையினூடே பயணிக்கும் புதுவித அனுபவத்தை கொடுப்பதை உணரமுடிகின்றது.

#TamilSchoolmychoice

“ஏய் இன்னா… இத்த வெறும் சொவருன்னு நென்சியா ? இது அரசியல் …அதிகாரம்… தெர்தா” போன்ற வசனங்கள் ஒரு சுவத்துக்காக இப்படி சண்டை போட்டுக்கொள்வார்களா? என்ற நம் எண்ணத்தை தவிடு பொடியாக்கிவிடுகின்றன.

ஒரு காலத்தில் சேரிப் பகுதியாக மட்டுமே பார்க்கப்பட்டு வெளியுலகிற்கே தெரியாமல் இருளில் இருந்த வடசென்னையின் சின்னஞ்சிறு வீதிகள், எதார்த்த சினிமாக்களின் கண்ணில் படத்தொடங்கியது முதல் இப்போது லைம் லைட் வெளிச்சத்தில் எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் ரௌடிக் கும்பல், கள்ளக் கடத்தல் போன்ற வடசென்னையின் கதைகளை மையமாக வைத்து பல எதார்த்தமான சினிமாக்கள் வரத் தொடங்கின. ஆனால் அதன் பின்னர் வந்த படங்களின் மூலம், வடசென்னையைச் சேர்ந்த இளைஞர்களின் இசை, நடனம், விளையாட்டு என ஒவ்வொன்றிலும் கொண்டிருக்கும் தனித்திறமைகளும் வெளியுலகிற்கு தெரியத் தொடங்கின.

அந்த வகையில், ‘மெட்ராஸ்’ படத்தின் கதையும், ஒரு அரசியல் பின்னணியும், அதனால் ஏற்படும் பழிவாங்கல்களையும் மையமாக வைத்து சொல்லப் பட்டிருந்தாலும், அதில் எந்த வித செயற்கை திணிப்புகளும் இன்றி இருப்பதால், நம்மால் படத்துடன் ஒன்றிப் போய்விட செய்திருக்கும் பா.ரஞ்சித்திற்கு வாழ்த்துகள்.

கதைச்சுருக்கம்:

ஒன்றாக இருந்த இரு அரசியல் கட்சிகள் இரண்டாகப் பிரிய, அந்த கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்த அந்த பகுதியை இரண்டாகப் பிரித்து தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றார்கள்.

நடுவீதியில் அமைந்திருக்கும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு பக்க சுவர், மிகப் பெரிய விளம்பரப் பதாகை போல் இருக்க அதில் யார் முகத்தை வரைந்து வைப்பது என்று இரு தலைவர்களுக்கிடையே போட்டி ஏற்படுகின்றது. அதனால் இரு தரப்பினரிடையே வெட்டு குத்து ஏற்படுகின்றது.

மூன்று தலைமுறைக்கு முன்னால் நடந்த இந்த தகராறு அவர்களது வாரிசுகளிடமும் தொடருகின்றது.

அந்த சுவர் ஒரு கௌரவத்தின் சின்னமாகத் தெரிவதால், வெட்டு,குத்து, கொலை என முடிந்து, இறுதியில் சுவற்றில் யார் முகம் வரையப்பட்டது என்பதை விறுவிறு திரைக்கதையும், சுவாரஸ்யமான காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார் ரஞ்சித்.

நடிப்பு:

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த கார்த்திக்கு ‘மெட்ராஸ்’ புதிய உத்வேகத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு சாதாரண வடசென்னை வாசியின் தோற்றம் அப்படியே அவருக்கு பொருந்தி இருக்கின்றது.

“மச்சான் ….எனக்கு பொண்ணு பொறந்தா அது என் மாப்ள ரொணால்டோக்கு தான் டா” என்று குடித்துவிட்டு அழுது புலம்புவதும், “கல்யாணம் பண்ணிக்கணும்னா ஒரு முத்தம் குடு” என்று காதலியிடம் அப்பாவியாக கேட்பதுமாக கார்த்தி மனதை தொடுகின்றார்.

தன் உயிர் நண்பன் மற்றும் அவரது மனைவி குழந்தைகளிடம் உருகுவதுமாக கார்த்தி தனது நடிப்பால் கவர்ந்து இழுக்கிறார்.

படத்தின் கதாநாயகி கேத்ரின் அழகு. வீதிக்கு ஒரு பெண் இப்படி இருப்பார் என்பது போல், அங்கு எண்ணெய் வடியும் முகங்களுக்கு நடுவே ஒரு பளீச் முகமாக படம் முழுவதும் வலம் வருகின்றார்.  முதல் பாதியில் மேக்கப் இல்லாமல் சென்னை வாசியாகத் தெரியும் கேத்ரின், இரண்டாவது பாதியில் மேக்கப்புடன் திடீரென வடநாட்டுப் பெண் போல் தோற்றமளிக்கிறார். அது தான் சற்று உறுத்தியது.

படத்தில் இன்னொரு மனதில் நிற்கும் கதாப்பாத்திரம் அன்பு. கார்த்தியின் நண்பராக அன்பு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன் மிக இயல்பாக நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அவரது மனைவியாக ‘மேரி’ கதாப்பாத்திரத்துடனான காதல் காட்சிகள் அழகு.

இதுதவிர, “ஜானி….” என்று தன் பெயரையே சொல்லி எல்லோரையும் கூப்பிடும் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருக்கும் கதாப்பாத்திரம், கார்த்தியின் அம்மா கதாப்பாத்திரம், பாட்டி கதாப்பாத்திரம், மாரி கதாப்பாத்திரம் என ஒவ்வொன்றும் வடசென்னையின் வாசத்தைப் பிரதிபலிக்கின்றது.

ஒளிப்பதிவு மற்றும் இசை

வடசென்னையின் ஒவ்வொரு வீதிகளும் ஜி.முரளியின் ஒளிப்பதிவில் மிக அழகாகக் தெரிகின்றது. பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் எடுக்கப்பட்டிருக்கின்றன.

மங்கலான தெருவெளிச்சங்கள், பகையுடன் துரத்தும் மனிதர்கள், சைக்கிளில் சுற்றும் இளைஞர்கள் என ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கின்றன.

சந்தோஷ் நாராயணனின் மனதை வருடும் பின்னணி இசை பரவசம். கார்த்தி, கேத்ரின் காதல் காட்சிகள், சுவரை காட்டும் காட்சிகள் என காட்சிகளுக்கேற்ற பின்னணி இசை அற்புதம்.

காகித கப்பல், இறந்திடவா போன்ற பாடல்கள் கானா பாலாவின் குரல்களில் நெஞ்சை கனக்க செய்கிறது.

நான் நீ, ஆகாயம் தீப்பிடித்தா பாடல்கள் ரசிக்கும் ரகம். கபிலனின் வரிகள் பாடலுக்கு மெருகூட்டுகின்றன.

மொத்தத்தில் ‘மெட்ராஸ்’ – வடசென்னை சுவற்றில் வரையப்பட்ட அழகிய சித்திரம்.

-ஃபீனிக்ஸ்தாசன்